சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அட்டவணை வெளியானது!

Published On:

| By christopher

சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று (ஜூன் 20) வெளியாகியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் தான் சென்னையில் நடந்த கடைசி சர்வதேச ஹாக்கி போட்டியாகும்.

அதன்பின்னர் சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ஹாக்கி இந்தியாவின் பொதுச்செயலாளர் போலா நாத் சிங் அறிவித்தார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன. அனைத்து அணிகளும் ஓரே குழுவில் இடம் பெற்றுள்ளன.

குழுவில் உள்ள நிலைகள் லீக் போட்டியில் பெறும் புள்ளிகளை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

அதே நாளில் இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவையும், பாகிஸ்தான் அணி, மலேசியாவையும் எதிர்கொள்கின்றன.

ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.

லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடத்தை பெறும் அணிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும்.

அதில் வெற்றி பெறும் இரு அணிகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக முறை பட்டம் வென்ற அணிகளாக இந்தியா (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) உள்ளன.

இந்நிலையில் நடப்பாண்டு தொடரில் இரு அணிகளில் யார் கோப்பையை வென்று முன்னிலை பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞர் கோட்டம்: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ஸ்டாலின்

”செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம்”- ராஜ்நாத் சிங்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share