தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் பங்கேற்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர்ப் பதற்றம், அமெரிக்கா தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அப்போது, மே 12-ந் தேதி மீண்டும் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்று இரு நாடுகளின் ராணுவ தலைமை இயக்குநர்கள், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர்.
டெல்லியில் மோடி ஆலோசனை
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
32 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
மேலும், பாகிஸ்தானுடனான போர்ச் சூழல் காரணமாக மூடப்பட்ட நாட்டின் 32 விமான நிலையங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மே 15-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாகிஸ்தான் தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்திவிட்ட நிலையில் 32 விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.