இந்திய- பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்- ஏப்ரல் 22 முதல் மே 10 வரை Timleline

Published On:

| By Minnambalam Desk

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 4 நாட்களாக இருநாடுகளும் மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களும் இன்று மாலை 5 (மே 10) மணியுடன் முடிவுக்கு வந்துள்ளன.

ஏப்ரல் 22-ந் தேதி பஹல்காம் தாக்குதல் முதல் மே 10 வரையிலான இந்தியா- பாகிஸ்தான் போர்ச் சூழல் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

ஏப்ரல் 22: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

ஏப்ரல் 23, 24: பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

1) பாகிஸ்தானுடனான சிந்துநதிநீர் ஒப்பந்தம் ரத்து
2) பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்
3) பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு
4) பாகிஸ்தானுடனான அட்டாரி- வாகா எல்லைகள் மூடல்
5) இந்தியாவில் இருந்து ஒரு வாரத்துக்குள் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவின் இந்த முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை அறிவித்தன

1) சிம்லா ஒப்பந்தம் ரத்து
2) இந்தியர்கள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்
3) பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

ADVERTISEMENT

ஏப்ரல் 24: இந்தியாவின் உரி எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஏப்ரல் 25: பஹல்காம் படுகொலைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வீடுகள், ஜம்மு காஷ்மீரில் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

ஏப்ரல் 25: பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி தரப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

ஏப்ரல் 28: பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அச்சம் உருவாகி இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஆசிப் தெரிவித்தார்.

ஏப்ரல் 28-29: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தியது.

ஏப்ரல் 30: இந்தியா அடுத்த சில மணிநேரங்களில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக நம்பத்தகுந்த புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியது.

மே 1: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய எந்த ஒரு தீவிரவாதியையும் விட்டு வைக்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்தார்.

மே 3: இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை வீரர் வழிதவறி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டார்.

மே 5: எல்லை மாநிலங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய போர் ஒத்திகை நடத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது

மே 7: பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கையை மே 7-ந் தேதி அதிகாலை இந்திய ராணுவம் தொடங்கியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது இந்திய விமானப் படை. இந்த முகாம்களில் பதுங்கி இருந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மே 8: இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி தருவோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மே 7 முதல் மே 10 வரை: இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்தியா தடுத்து அழித்தது. பாகிஸ்தானின் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. குஜராத் முதல் ஜம்மு காஷ்மீர் வரையிலான அனைத்து எல்லை மாநிலங்களிலும் பாகிஸ்தான் 500க்கும் மேற்பட்ட ‘துருக்கி’ டிரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தின. இதற்கு பதிலடியாகவும் இந்தியாவும் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்கின. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தையும் இந்திய கடற்படை தாக்கியது.

மே 10: இந்தியா- பாகிஸ்தான் இடையே மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக தாக்குதல்களை உடனே நிறுத்துவதாக அறிவித்தன. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நீடித்த அதி உச்ச போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share