தாக்குதல்களை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் ஒப்புதல்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published On:

| By Minnambalam Desk

இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் நடத்தி வரும் அனைத்துவித தாக்குதல்களையும் முழுமையாக நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் பலியாகினர். இதனையடுத்து பாகிஸ்தானுடனான அரசியல் ரீதியான உறவுகளை முறித்துக் கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் முகாம்களை குறிவைத்து பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய விமானப் படை வீரர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கையால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது.

இதற்கு பதில் தருவதாக கூறிக் கொண்ட பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் மாநிலம் வரையிலான அனைத்து எல்லை பகுதிகளிலும் ராணுவ நிலைகள் மற்றும் பொதுமகளின் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய நிலைகள் மீது 500க்கும் அதிகமான டிரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். மேலும் போர் விமானங்கள் மூலமும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் இந்த மூர்க்கமான நடவடிக்கைகளுக்கு இந்திய ராணுவத்தின் விமானப் படை, கடற்படை பதிலடி கொடுத்தன. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ராணுவ தளங்கள் மீதும் இந்திய பாதுகாப்புப் படையின்ர் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில், இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் தங்களது பரஸ்பரமான அனைத்துவிதமான தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சூழலைப் புரிந்து கொண்டு பதற்றத்தைத் தணிக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் துணை பிரதமரும், அனைத்துவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் பாகிஸ்தான் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share