முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றதன் மூலம், நூறாவது டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த உற்சாகத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் பேட்டிங்கை இந்திய அணிக்குக் கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நீண்ட பார்ட்னர்ஷிப் கொடுக்காததால், ஆறாவதாகக் களமிறங்கிய ஹனுமா விஹாரியின் பங்களிப்பினால் முதல் இன்னிங்ஸில் 242 ரன்களை எடுத்தது இந்திய அணி.
இரண்டாவதாகக் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் போட்டியைப் போலவே முந்நூறு ரன்களுக்கு மேலாக எடுத்துவிடுவார்கள் என்று எண்ணும் அளவுக்கு டாம் லாதம், டாம் புலுண்டெல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் இருந்தது. ஆனால், விரைவிலேயே முகமது ஷமியின் அதிவேக பந்துவீச்சினால் நிலைகுலைந்தது நியூசிலாந்து அணி. கைல் ஜேமிசனின் கடைசி நேரப் போராட்டத்தினால் கணிசமாக உயர்ந்து 235 ரன்களை எடுத்தது நியூசிலாந்து அணி. இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை என்ற கணக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினாலும், நியூசிலாந்தின் எதிர்தாக்குதலால் நிலைகுலைந்தது.
ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி ஆகியோர் 25 ரன்களுக்குள் பெவிலியனுக்கு நடையைக் கட்ட, மயங்க் அகர்வால், அஜிங்க்ய ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோர் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் கையில் ஆட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களது விக்கெட் எளிதில் விழும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிற்கதியான நிலையில் இருக்கிறது இந்திய அணி.
**-சிவா**
