ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை காரில் இருந்தபடி கிரேன் மூலம் போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற புதிய கட்சியைத் துவங்கினார்.
சந்திர சேகர் ராவ் அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி 4000 கி.மீ தூரம் நடைபயணத்தை துவங்கினார். இதுவரை 3,500 கி.மீ தூரம் ஒய்.எஸ்.ஷர்மிளா நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 28) தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் நடைபயணம் சென்றபோது, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி நிர்வாகிகளுக்கும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஷர்மிளா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடு அமைந்துள்ள பிரகதி பவன் முன்பு ஷர்மிளா மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த ஷர்மிளாவின் காரை அகற்ற முயன்றனர். உடனே ஷர்மிளா தனது காரின் உள்ளே சென்று அமர்ந்தார்.
காவல்துறை அதிகாரிகள் அவரை காரில் இருந்து வெளியேறும்படி கூறினர். ஆனால் ஷர்மிளா காரில் இருந்து வெளியேறாததால், அவரது காரை கிரேன் மூலம் இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி நிர்வாகிகள் காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டபடி ஷர்மிளாவின் காரின் பின்னால் சென்றனர்.
பின்னர் ஷர்மிளாவை கைது செய்த போலீசார், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நடைபயணத்திற்கு தற்காலிமாக தடை விதித்தனர்.
ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை
காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை: இஸ்ரேல் தூதர் விளக்கம்!