பொதுவாக யூடியூபர்கள் என்றாலே பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். ஆனால், யூடியூபர்கள் நல்ல மனம் கொண்ட மனிதாபிமானமிக்கவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூலை 30 ம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர். பெரும் இயற்கை பேரிடரில், ஸ்ருதி என்பவர் தாய், தந்தை, தங்கை உட்பட 9 பேரை நிலச்சரிவில் இழந்தார்.
நிலச்சரிவு நடந்த சமயத்தில் கோழிக்கோட்டில் பணிபுரிந்து வந்ததால் ஸ்ருதி உயிர் பிழைத்தார். செய்வதறியாது நிற்கதியாய் இருந்த ஸ்ருதியை, அவரது காதலர் ஜென்சன்தான் தேற்றி வந்தார். கடைசி வரை உன்னை கை விட மாட்டேன் என்று கூறி ஸ்ருதிக்கு ஆதரவாக இருந்து வந்தார். ஆனால், ஜென்சனையும் ஸ்ருதியுடன் வாழ வைக்க கூடாது என்பதில் எமன் உறுதியாக இருந்துள்ளான். முதலில் ஜென்சன் ஸ்ருதி காதல் கதையை பார்க்கலாம்.
கேரளாவின் அம்பலவயல் அருகே உள்ள ஆண்டூரைச் சேர்ந்தவர் ஜென்சன். இவரும் ஸ்ருதியும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இருவரின் திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் வயநாட்டில் இயற்கை பேரிடரில் ஸ்ருதி தனது குடும்பத்தையே இழந்தார்.
இந்த துயரமான காலகட்டத்தில் எல்லாம் ஸ்ருதியுடன் இருந்தது ஜென்சன்தான். குடும்பத்தை இழந்து நின்ற ஸ்ருதியை, மனரீதியாக தேற்ற ஜென்சன் பல விஷயங்களை செய்து வந்துள்ளார். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட தங்களின் திருமணத்தை அவர்கள் நினைத்தபடி , டிசம்பர் மாதம் நடத்திவிடலாம் என ஜென்சன் முடிவெடுத்திருந்தார்.
ஆகஸ்ட் 29 அன்று, நிலச்சரிவில் உயிரிழந்தோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு ஜோடியாக சென்று மரியாதையும் செலுத்தினர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.
இப்படி ஸ்ருதியின் ஒற்றை நம்பிக்கையாக இருந்த ஜென்சனையும் திடீரென இழந்தார் ஸ்ருதி. கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஜென்சன், ஸ்ருதி ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் வேனில் சென்று கொண்டிருந்துள்ளனர். கல்பெட்டா அருகே வெள்ளரம்குன்னு என்ற இடத்தில் எதிர்பாரா விதமாக அந்த வேனும் எதிரில் வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜென்சன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 12 ஆம் தேதி இறந்து போனார்.
கடைசி வரை உடன் வருவேன் என்று கூறி துக்ககரமான தருணத்தில் உடன் இருந்த காதலரும் இறந்து போனது ஸ்ருதியின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. அழ கூட திராணியில்லாமல் மாறி போனார் ஸ்ருதி. சே… என்ன வாழ்க்கை இது… இப்படியெல்லாம் ஒரு பெண்ணுக்கு நடக்கிறதா? தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று என்று நடிகர் மம்முட்டி ஸ்ருதியின் நிலை பற்றி தனது மன வேதனையை கொட்டியிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் , ஸ்ருதி கேரளாவின் மகள் … கேரளாவே அவருக்கு துணை நிற்கும் என்று ஆறுதல் கூறியிருந்தார்.
தற்போது, ஸ்ருதி தனது துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவரை மனவேதனையில் இருந்து மீட்டெடுக்க பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் போன்றவர்கள் கூட களம் இறங்கியுள்ளனர். பாபி செம்மனூர் சார்பில் ஸ்ருதியின் வருங்கால வாழ்க்கைக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அதே வேளையில், திருச்சூர் சாலக்குடியை சேர்ந்த டைம் நியூஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் அவருக்கு 11.5 சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்துள்ளனர். அதில், ஸ்ருதிக்காக வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யூடியூபர்கள் தங்கள் சேனலுக்காக புதிய அலுவலகம் கட்டுவதற்காக சேமித்து வைத்த பணத்தை ஸ்ருதிக்காக வழங்கியுள்ளனர் என்பது கேரள மக்களை நெகிழ செய்துள்ளது.
பணத்துக்காக மட்டுமே யூடியூபர்கள் இயங்குவதில்லை. அடுத்தவர்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் கரங்களாகவும் யூடியூபர்கள் உள்ளனர் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது அல்லவா?
எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொடுமை தாங்க முடியாமல் ஜெயம் ரவி பிரிந்தாரா? – மெளனம் கலைத்த ஆர்த்தி
செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் – போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?: ஈபிஎஸ் கேள்வி!