தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் பிகார் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் இன்று (மார்ச் 18 ) சரணடைந்தார்.
இது தொடர்பாக பிகார் காவல்துறையின் எக்னாமிக் குற்றப்பிரிவு EOU இன்று (மார்ச் 18 ) வெளியிட்ட அறிக்கையில், ”பிகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பீதியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை பரப்பிய மணிஷ் காஷ்யப், இன்று காவல்துறையில் சரணடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணீஷ் காஷ்யப் 2020 இல் பிகாரின் சன்பதியா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். வேட்பு மனுவில், மணிஷ் தனது பெயரை ‘திரிபுராரி குமார் திவாரி’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே அவரது உண்மையான பெயராகும். அவர் தன்னை எப்போதும் பிகாரி மகன் என்றே அறிமுகப்படுத்தி கொள்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவந்த மணிஷ் காஷ்யப் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதன் மூலம் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் இதுவரை 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி வேட்புமனு தாக்கல்!
44 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!