”உங்கள் வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கும் கவுரவமாகும்”-அமெரிக்காவில் மோடி

Published On:

| By Jegadeesh

அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று(ஜூன் 22) வெள்ளை மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது

அந்த வகையில் பிரதமர் மோடியை வரவேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ வெல்கம், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்”என்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், “அரசுமுறைப் பயணமாக உங்களை இங்கு முதன்முதலில் விருந்தளித்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் வறுமையை ஒழித்தல், சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல், பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் போன்றவற்றில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. 

உங்கள் ஒத்துழைப்போடு, இலவச, திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் நாட்டிற்காக QUADஐ பலப்படுத்தியுள்ளோம்”என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,“அன்பான வரவேற்புக்கு அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் நட்புக்கு நன்றி. அமெரிக்க அரசு எனக்கு அளித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவமாகும்.

இந்தியர்களுக்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அமெரிக்கா இந்தியாவின் உறவின் உண்மையான பலம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தான்.

பிரதமரான பின்னர் பல முறை வெள்ளை மாளிகை வந்த பின்னரும் தற்போது வெள்ளை மாளிகை கதவுகள் பெரிய அளவில் திறந்து உள்ளன.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

உலகம் முழுவதும் வலிமையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா -இந்தியா நட்புறவு இருக்கும். அமைதி ,பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை நிலைநாட்ட இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என உறுதி பூண்டுள்ளோம்.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகம் புதிய வடிவத்தை பெற்றுள்ளது. ஜோ பைடனுடான பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார் பிரதமர் மோடி.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வசூலை வாரிக்குவிக்கும் ஆதிபுருஷ்: படக்குழு அறிவிப்பு!

விஜய் பிறந்தநாளில் லியோ போஸ்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel