நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட விவகாரம் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி, பூஜைகள் நடத்தி ஆதினங்களிடமிருந்து செங்கோலைப் பெற்று புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார்.
அப்போதே இதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள், இது மன்னராட்சி நடைமுறை என்று எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆனால், இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.
இந்நிலையில் 18ஆவது மக்களவைக்கான தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இதில் மூன்றாவது பெரிய கட்சியான சமாஜ்வாதி கட்சி எம்.பி.சவுத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கடிதம் கொடுத்தார்.
இதுகுறித்து சவுத்ரி ஊடகங்களிடம் கூறுகையில், “செங்கோல் என்பது மன்னர்களின் கையில் இருக்கும் தடி. தற்போது வாக்களித்த ஒவ்வொருவரும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கான அரசாங்கத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். மன்னராட்சிக்கு பிறகு நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம்.
இப்போது நாடு மன்னரின் தடியால் இயங்குமா? அல்லது அரசியலமைப்புப்படி இயங்குமா?…
ஜனநாயகத்தை காப்பாற்ற செங்கோலை நீக்கிவிட்டு அங்கு அரசியலமைப்பை நிறுவ வேண்டும்” என கூறினார்.
தனது கட்சி எம்.பி.யின் கருத்து குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “கடந்த ஆண்டு சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி அதற்கு தலை வணங்கினார். ஆனால் இந்த ஆண்டு மீண்டும் பதவி ஏற்றபோது அதை கண்டுகொள்ளவில்லை. தலைவணங்க மறுத்துவிட்டார். இதை பிரதமருக்கு நினைவூட்ட விரும்பினார் சவுத்ரி” என்றார்.
காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் இதுகுறித்து கூறுகையில், “இது சமாஜ்வாதி கட்சியின் நல்ல ஆலோசனை” என்றார்.
அதேசமயம் பாஜக தரப்பில் அக்கட்சி செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “சமாஜ்வாதி கட்சி தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமதித்துவிட்டது. செங்கோல் அவமதிக்கப்பட்டதை இந்தியா கூட்டணியில் உள்ள திமுக ஆதரிக்கிறதா” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்படி செங்கோல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியிருக்கும் நிலையில் உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
“இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அடேங்கப்பா… வைரலாகும் ஆனந்த்-ராதிகா திருமண அழைப்பிதழ் வீடியோ!
“ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்” – உதயநிதி குட் நியூஸ்!