தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published On:

| By Kavi

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பிறந்த குழந்தைகளும், சிகிச்சைக்காக வந்த குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தன.

கடந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு, சுமார் 10 மணி இருக்கும்… அப்போது சில குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டிக்கொண்டிருந்தனர்.

சுமார் 10.30 மணியளவில் அந்த பச்சிளம் குழந்தைகள் பிரிவில் புகை பரவியது. என்ன நடக்கிறது என்று சுதாகரித்துக் கொள்வதற்குள் தீ மளமளவென பரவியிருக்கிறது.

அந்தசமயத்தில் குழந்தைகள் வார்டுக்கு வெளியே உள்ள நடைபாதையில் தூங்குவதற்காக படுத்திருந்த யாகூப் மன்சூரி, தீ பற்றி ஏறிவதை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த ஜன்னலை உடைத்துவிட்டு, உள்ளே சென்றார்.

ஒவ்வொரு குழந்தையாக வெளியே எடுத்து வந்து அங்கு நின்றிருந்தவர்களிடம் கொடுத்திருக்கிறார். இப்படியாக 7 குழந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்த ஆண் தேவதையான யாகூப் மன்சூரிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதே மருத்துவமனையில் யாகூப் மன்சூரியின் இரண்டு இரட்டை குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தன. தான் மற்ற குழந்தைகளை காப்பாற்றியது போல தன்னுடைய குழந்தைகளையும் யாராவது காப்பாற்றியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார் யாகூப் மன்சூரி.

ஆனால் அவரது இரட்டை மகள்கள் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பிழம்பு அதிகமாக இருந்தால் யாராலும் உள்ளே செல்ல முடியவில்லை. இரு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

தீ விபத்து நடந்த அன்று  தனது குழந்தைகளை கண்டறிய யாகூப் மன்சூரியால் முடியவில்லை.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து பிணமாக கிடந்த குழந்தைகளில் அவரது இரட்டை குழந்தைகளும் இருந்தன.

இதை பார்த்து யாகூப் மன்சூரி மற்றும் அவரது மனைவி நஸ்மா ஆகியோர் கதறி அழுதனர்.

7 குழந்தைகளை காப்பாற்றிய போது தனது குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற துக்கமும் வேதனையும் ஒரு பக்கம் இருந்தாலும் தனது குழந்தைகளோடு சேர்த்து உயிரிழந்த 11 குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று கோரியுள்ளார் யாகூப் மன்சூரி.

தீ விபத்து குறித்து மன்சூரி கூறுகையில், “தனது மனைவி நஸ்மா பானு. கடந்த நவம்பர் 9ஆம் தேதிதான் எங்களுக்கு குழந்தை பிறந்தது. எனது மகள்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓரை மாவட்ட மருத்துவமனையில் இருந்து இந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்கள்.

அன்றைய தினம் குழந்தைகள் வார்டுக்குள், ஒரு குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த தாய் அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.

அப்போதுதான் வெளியிருந்தவர்கள் உள்ளே நுழைய முயன்றோம். ஆனால் முடியவில்லை. இதனால் வெளிபுறத்தில் இருந்த ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே அனல் காய்ந்தது. புகை நிறைந்திருந்தது.

நானும் எனது மைத்துனர் ரானோ முகமதுவும் அவுட்டர் யூனிட்டில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை ஒவ்வொன்றாக ஜன்னல் வழியாக வெளியே இருப்பவர்களிடம் எடுத்து வந்து கொடுத்தோம்.

புகை சூழ்ந்திருந்ததால் எங்கள் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. உள்ளே இருந்த சில நிமிடத்தில் எங்களுக்கே உடம்பு முடியாமல் போய்விட்டது. பாவம் குழந்தைகள் எப்படி தாங்கியிருப்பார்களோ…

என்னுடைய குழந்தைகளை   வேறு யாராவது காப்பாற்றியிருப்பார்கள் என்று நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அவர்களது காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
பிரேத பரிசோதனை செய்யும் அறையில் எங்களது குழந்தைகள் வைக்கப்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

உயிரிழந்த அத்தனை குழந்தைகளுக்கும் நீதி வேண்டும். இனி எந்த குழந்தைக்கும் இதுபோன்ற நிலை வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

தனது குழந்தைகளை இழந்த போதும் மற்ற 7 குழந்தைகளுக்கு தந்தையாகவும்,ஹீரோவாகவும் பார்க்கப்படுகிறார் மன்சூரி.

ஹம்ரிப்பூர் பகுதியைச் சேர்ந்த மன்சூரி, அல்மீரா என்றழைக்கப்படும் வார்டுரோப், கப்போர்டு ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரி ஆவார்.

ஜான்சி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 45 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும் 11 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படும் நிலையில் ஜான்சி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel