சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்ஜிங்கில் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் ஜி ஜின்பிங் மீண்டும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், அதிபராகவும் இருப்பார். அந்தவகையில், சீனாவில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முறை தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியில் இருக்க முடியும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜி ஜின்பிங் தான் பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் இருப்பார் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜி ஜின்பிங் பேசும்போது, “உலக நாடுகளுக்கு சீனாவின் உதவி தேவைப்படுகிறது. அதேபோன்று, உலக நாடுகளின் உதவியில்லாமல், சீனாவால் வளர்ச்சி அடைய முடியாது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, உலக அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மையுடன் விளங்கி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சீன மக்களின் நம்பிக்கைக்கு தகுதியான நபர் என்பதை நிரூபிக்க என்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக, அதிக முறை அதிபராக ஜி ஜின்பிங் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
வெடித்து சிதறிய கார்: விபத்தா? சதியா?
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷம் : மாணவன் தற்கொலை!