இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கங்கை நதிக்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மல்யுத்த வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியும் கொடூரமாக கைது செய்யப்பட்டோம்.
போராட்டம் நடத்திய இடத்தையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு போராடும் பெண்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் ஏதேனும் குற்றம் செய்தார்களா… காவல்துறை எங்களை குற்றவாளிகளை போல நடத்துகிறார்கள்.
நாங்கள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற அந்த தருணம் எங்களுக்கு நினைவிருக்கிறது.
இப்போது எங்கள் கழுத்தில் அணியும் பதக்கங்களுக்கு அர்த்தம் இல்லை என்று தெரிகிறது. இந்த பதக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. பதக்கங்களை அடைய நாங்கள் கடுமையாக உழைத்தோம்.
பதக்கங்கள் முழு தேசத்திற்கும் புனிதமானவை. புனித பதக்கத்தை வைத்திருக்க சரியான இடம் புனிதமான கங்கை அன்னையே தவிர நம்மை சாதகமாக்கிக் கொண்டு நம்மை ஒடுக்குபவர்களுடன் நிற்கும் புனிதமற்ற அமைப்பு அல்ல.
இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கைக்கு பேரணியாக சென்று பதக்கங்களை மிதக்க விடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று மாலை 6 மணியளவில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை ஆற்றிற்கு மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களுடன் பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மல்யுத்த வீரர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
திமுகவுடன் கூட்டணி திருப்பூர் துரைசாமிக்கு பிடிக்கவில்லை: வைகோ
தோனிக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைக்குமா? – சாக்ஷி வேதனை!