டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானம் வரலாற்றின் பார்வையில் பல்வேறு வெற்றிகரமான போராட்டங்களை தாங்கிய களமாக உள்ளது. தற்போது பாலியல் சீண்டலுக்கு எதிராக நீதி கேட்டு தொடர்ந்து 3வது நாளாக போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட பூமியாக மாறியுள்ளது அதே ஜந்தர் மந்தர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் தொல்லைக்கும், பயிற்சியாளர்களால் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறி மல்யுத்த வீராங்கனைகளிடம் இருந்து சமீபத்தில் புகார் எழுந்தது.
இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்டோரை பதவியில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை (ஜனவரி 18) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
உலகளவில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக நடந்துள்ள கொடுமைகள் இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீரர்களின் போராட்டத்திற்கு ஹரியானா முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல்கள் வந்தன
போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறுகையில், “லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எங்களிடம் புகாரளித்துள்ளனர்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் எங்களை அழைத்து பேசும் பட்சத்தில் இந்த பெயர்களை நாங்கள் அவர்களிடம் வெளிப்படையாக தெரிவிப்போம்.
இதுவரை நான் பாலியல் சீண்டல்களை சந்தித்தது இல்லை. ஆனால், வீராங்கனைகளுக்கு எதிராக நடந்துள்ள விஷயங்களைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று சொன்னதுமே, எனக்கு பிரிஜ் பூஷனின் நெருக்கமான அதிகாரிகளின் மூலம் கொலை மிரட்டல்கள் வந்தன.
நாங்கள் உண்மையைப் பேசுவதால் நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சில இளம் வீராங்கனைகள் மட்டுமே முதலில் இருந்தனர். இப்போது கிடைத்து வரும் ஆதரவை பார்த்து இன்னும் அதிகமான பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் முன் வந்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்படும் வரை போராட்டம்
எங்களுக்கு நீதி வேண்டும். இந்த குற்றச் செயல்களில் பயிற்சியாளர்கள், நடுவர்கள் இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
இந்த கோரிக்கை நிறைவேறும்வரை எங்கள் வீரர்கள் எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார்கள். தவறு செய்தவர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வீரர்கள் தங்கிய அதே மாடியில்..
அதேபோல 21 வயதான மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறுகையில், “மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் நடந்து கொண்டிருந்த போது, ஜூனியர் வீராங்கனைகள் இருந்த அதே மாடியில் தான் தங்கினார்.
அவர் அறையின் கதவைத் திறந்தே வைத்திருப்பார். இதனால் அங்கிருந்த ஒவ்வொரு வீராங்கனையும் அசௌகரியத்திற்கு ஆளானார்கள். இதனை அவர் தெரிந்தே தான் செய்தார்” என்றார்.
இப்போதுள்ள ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் விளையாட முடியும். கீழ் நீலையில் அழுக்கு அதிகமாக சேர்ந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி முழு விவவரத்தையும் தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் அன்ஷு மாலிக், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங், முகாம்களிலும் சரி, போட்டிகளின் போதும் சரி, ஒவ்வொரு வீராங்கனைகளையும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி சங்கடப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நானே தூக்கிட்டுக்கொள்வேன்
வீரர்களின் இந்த குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “போராட்டம் நடத்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டமைப்பில் எந்த பிரச்னையும் இல்லையா? புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்போது இதுபோன்று பிரச்னைகள் எழும்.
இவர்கள் குற்றம்சாட்டுவதைப்போல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டுக்கொள்வேன். இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் ஒத்துழைக்க தயார்” என்று கூறியுள்ளார்.
நள்ளிரவு பேச்சுவார்த்தை தோல்வி
நேற்று இரவு (ஜனவரி 19) 10.30 மணியளவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது வீட்டில் விளையாட்டு வீரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை அதிகாலை 3 மணி வரை நீடித்த நிலையில் அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் / வீரர்கள் ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல்துறை மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘அரசியல் சதி’ அம்பலப்படுத்துவேன்
கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எனக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் பின்னணியில் உள்ள ‘அரசியல் சதியை’ அம்பலப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்,
உலக அளவில் மிகப்பெரிய நாடான இந்தியா, விளயைாட்டுத்துறையில் மிக மிக பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இதற்கு காரணம், விளையாட்டு வீரர்களுக்கு உரிய வாழ்கைப் பாதுகாப்பு எந்த அரசாலும் வழங்கப்படவில்லை என்பதுதான். மல்யுத்த வீராங்கனைகளின் புகார் மீது உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்தால்தான் விளையாட்டு வீரனாக வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு இளம் வீரர், வீராங்கனைகளுக்கும் நம்பிக்கை கிடைக்கும்.
கிறிஸ்டோபர் ஜெமா