புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் டெல்லியில் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்றறு வந்த நிலையில் பிரஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் இருந்து மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் மல்யுத்த வீரர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குண்டர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாராளுமன்றத்தில் உள்ளார்.
ஆனால் நாங்கள் சாலையில் தர தரவென்று இழுத்து செல்லப்படுகிறோம். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது வருத்தமான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
”முடிசூட்டு விழா முடிந்துவிட்டது. தற்போது ஆணவ மன்னன் தெருவில் பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களின் குரலை நசுக்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம் : திறப்பு விழாவா… கால்கோள் இடும் விழாவா?
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்