வீடியோ : உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த சாதனை!

இந்தியா

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு இன்று (நவம்பர் 12) உலகின் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

68 சட்டசபை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆளும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை இமாச்சல் கொண்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

68 தொகுதிகளுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 412 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அம்மாநிலத்தில் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையுடன் யாரை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகின் உயரமான வாக்குச்சாவடி!

இமயமலைக்கு அருகில் இருக்கக்கூடிய இமாச்சல் பிரதேசம் அதிக மலை பகுதிகள் கொண்ட மாநிலம் ஆகும்.

இதனால் வாக்காளர்களின் வசதிக்கேற்ப தொலைதூரப் பகுதிகளில் மூன்று தற்காலிக வாக்குச் சாவடிகள் உட்பட 7,884 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

அதன்படி இந்தியா திபெத் எல்லை அருகே அமைந்துள்ள கின்னவூர் மாவட்டத்தில் உள்ள தஷிகங் கிராமத்தில் வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தஷிகங் கிராமமானது கடல் மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியானது உலகின் மிக உயர்ந்த வாக்குச் சாவடியாகும்.

நூறு சதவீதம் வாக்குப்பதிவு!

தஷிகங் கிராமத்தில் மொத்தமே 75 பேர் வசித்து வரும் நிலையில், 52 பேர் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு தற்போது 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ இமாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ட்ரெண்டாகும் 70ஸ் கவர்ச்சி நாயகி!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.