உலக எய்ட்ஸ் தினமானது டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் எதனால் வருகிறது? உள்ளூர் தொடங்கி உலகம் வரை எய்ட்ஸ்க்கான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தினார்கள்? தற்போது இருக்கும் நிலை என்ன என்று ஒட்டுமொத்தமாய் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்.
1990 களில் உச்சத்தில் இருந்த எய்ட்ஸ் தற்போது ஓரளவு கட்டுக்குள்ளும் , முதல் இருந்ததை விட மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு இருப்பதற்கும் காரணம் தமிழக அரசின் எக்கச்சக்க முன்னெடுப்பு என்று கூட கூறலாம்.
1990ன் இறுதிகட்டத்தில் ஒரு வார்த்தை மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய பீதியை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது தான் எய்ட்ஸ்.
உயிர்க்கொல்லி நோயாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்குறித்தான உண்மைகளும் வதந்திகளும் அதிபரவலாக பேசப்பட்டு வந்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவோடு எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வந்தாலும் , 1987 ஆம் ஆண்டு முதன்முதலில் எய்ட்ஸ் நாளுக்கான அனுசரிப்பை எடுக்கலாம் என்ற பேச்சு ஆரம்பித்தது.
சுகாதார வல்லுநர்களாக இருந்த ஜேம்ஸ்.டபிள்யூ பான் மற்றும் தாமஸ் நேட்டர் இருவரும் எய்ட்ஸ் விழிப்புணர்வை எடுக்கும் நாளுக்கான கருத்தை முன்மொழிந்தனர்.
அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் சர்வதேச சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டே 1988ஆம் ஆண்டே உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டது.
இதன் மூலம் மக்களுக்கு ஒரு சிறிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த காலகட்டம் தான் அது.
சொல்லப்போனால் இந்தியாவில் தான் முதன் முதலில் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது.
நோயின் பரவல் ஆரம்பித்த காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயினால் 3,36,386 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் 1990களில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1137 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 270 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அப்போது தான் பிரபலமான ஒற்றை வரியில் விழிப்புணர்வாய் “புள்ளிராஜாக்கு எய்ட்ஸ் வருமா?” என்ற விளம்பரம் உருவானது.அந்த விளம்பரம் ஏற்படுத்திய தாக்கமும், அதனால் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் வேற லெவல் .அதனை மிஞ்சுவதற்கு இன்று வரை ஒரு விளம்பரம் கூட உருவாகவில்லை.
பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் எய்ட்ஸ் பரவுவதை உறுதி செய்த மருத்துவ துறை ,அதற்கான மருந்துகள் ஆரம்பத்தில் இல்லாத சமயத்தில், அதையொட்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பரவலைத் தடுக்கவும் முடியும் என்றும், மக்கள் அச்சம் கொள்ளாமல் இருப்பர் என்பதற்காகவும் முன்பை விட நிறைய முன்னெடுப்புக்களை எடுக்க ஆரம்பித்தார்கள்.
மக்களுக்கு எளிதாய் கிடைக்கும் விதத்தில் மருத்துவம் மற்றும் ஆணுறை பயன்படுத்துவதன் அவசியம் , எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாயுற்ற மகளிருக்கு சிகிச்சை, தாய்மார்களால் குழந்தைக்கு பரவாமல் இருக்க சிகிச்சை என பலகட்ட மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
பின்னர் 1996 ஆம் ஆண்டு UNAIDS ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பு விளம்பரங்களை ஏற்படுத்துவதற்கான ;பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது.
2004-2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் 1.83 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் சுமார் 162728 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது குறிப்பாக இந்தியாவில் மட்டும் 2011-2021 க்கு இடைபட்ட காலத்தில் 17,08,777 பேர் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாக மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கை.
இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக உலக சுகாதார நிறுவனமும், ஐநாவின் அறிவுறுத்தலோடு ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தோடு இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.
இப்படியாக இன்று வரை பல்வேறு முன்னெடுப்புகள் எடுத்து வந்தாலும் , 2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தரவின் அடிப்படையில் பார்க்கும் போது ஒட்டு மொத்தமாக உலகில் 38.4 மில்லியன் மக்கள் ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இரண்டு பங்கு மக்கள் அதாவது 25.6மில்லியன் மக்கள் மட்டும் ஆப்பிரிக்காவில் இருக்கின்றனர்.
உலக அளவில் இங்கிலாந்தில் தான் அதிகபட்சமாக ஆண்டுக்கு சுமார் 4139 மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது 124000 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு வேகமாக பரவி வரும் எய்ட்ஸின் பரவல் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு காரணமே இங்கு 1990களின் முடிவில் மற்றும் 2000ன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு விளம்பரங்கள்.
கமல்ஹாசன் , அமிதாப் பச்சன் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட பிரபலங்கள் இதனை பற்றிய கருத்துக்களை விளம்பரங்களாக கொடுத்தனர்.
அன்று ஏற்படுத்திய விளம்பரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்.ஆனால் இன்று இது மாதிரியான விளம்பர விழிப்புணர்வுகள் குறைந்திருக்கும் நிலையில் இன்றைய இளைஞர்கள் அதிகமாய் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள்.
இந்த ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் கருவாக முக்கிய நோக்கமாக சமமாக்குதலை அடிப்படையாய் வைத்து முன்னெடுப்புக்களை எடுத்திருக்கிறார்கள் உலக சுகாதார நிறுவனம்.
அது மட்டுமல்லாது , தற்போது 52 சதவீத குழந்தைகள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சரியான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் , 70 சதவீத மக்கள் தற்போது வரை உலகளவில் சிகிச்சையில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ உலக சுகாதார வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.
மேலும் 2030 க்குள் எய்ட்ஸை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாய் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் தற்போது எய்ட்ஸ் விழிப்புணர்வும் அதிகமாய் இருக்கிறது , அதனால் தான் இந்தியாவிலேயே தமிழகம் எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
ஹெச்.ஐ.வி. எய்ட்சால் பாதிக்கப்பட்டு மக்களிடையே வரும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், அவர்களுக்கு உரித்தான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு இன்னும் நிறைய முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்கள்.
பவித்ரா பாலசுப்ரமணியன்
விவசாயிகளின் தேவைக்காக உரம் இறக்குமதி: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
முதல்வரே பொறுப்பு : ஆளுநருக்கு ஆதரவாக அண்ணாமலை