அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா இன்று (மார்ச் 10) டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் மேலவை உறுப்பினரான கவிதா மீதும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மார்ச் 9ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் மார்ச் 9ஆம் தேதிக்கு பதிலாக 16ஆம் தேதி ஆஜராக அவகாசம் தரவேண்டும் என அமலாக்கத் துறையிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு மார்ச் 11ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் அவர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வலியுறுத்தி இன்று டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மசோதா கொண்டு வரப்படும் வரை போராட்டம் நிறுத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், சிபிஐ(எம்), சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, அகாலி தள் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை உங்களது இந்த நோக்கத்திற்காக தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என்று கவிதாவிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மசோதா கூட தாக்கல் செய்யப்படவில்லை.
மக்களவையில் 14 சதவிகித பெண் எம்.பி.க்களும் மாநிலங்களவையில் 11சதவிகித பெண் எம்.பி.க்களும் மட்டுமே உள்ளனர். எனவே வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து கவிதா பேசுகையில், “உலகில் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அரசியலில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தில் முழு பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த மசோதாவை நிறைவேற்ற ஒரு சிறப்புமிக்க வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை சம்மன் குறித்து அவர் குறிப்பிடுகையில், “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு கேவலமான அரசியலை செய்கிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் பலமுறை கூறியுள்ளேன்.
ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று மார்ச் 2 ஆம் தேதி நான் அறிவித்த பிறகு எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது” என்று கூறினார்.
பிரியா
சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!
முன்றாவது முறையாக அதிபராக பதிவியேற்றார் ஜி ஜிங்பிங்