154 சவுக்கடி பெற்ற போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Published On:

| By christopher

women activist Narges Mohammadi selected for Nobel Peace Prize

பெண்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 6) அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மனிதர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆண்டுதோறும் ஸ்வீடன் அரசு நோபல் பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த விருதானது இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போதும் சிறையில்… 

அதன்படி, 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் முகமதி பலமுறை சிறை சென்றுள்ளார். தற்போது அவர் சிறையில்தான் உள்ளார்.

பழமைவாத சிந்தனை கொண்ட ஈரானில் இன்றும் பெண்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அரங்கேறி வருகின்றன.

இதனை எதிர்த்து ஈரானில் நடந்த மாபெரும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நர்கீஸ் முகமதியை 13 முறை ஈரான் அரசு கைது செய்து ஐந்து முறை சிறை தண்டனை அளித்துள்ளது. மேலும் அவருக்கு தண்டனையாக இதுவரை 154 முறை சவுக்கடியும் ஈரான் நாட்டு அரசு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு 31 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகியோருக்கும்,

இயற்பியலுக்கான நோபல் பரிசு பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும்,

வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு விருது வரும் 9ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிட தடை கோரி மனு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

விஜய்க்கு எடப்பாடி விட்ட தூது!

Comments are closed.