விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைதான ஷங்கர் மிஸ்ரா, தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்தப் பெண்தான் இருக்கையில் சிறுநீர் கழித்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த 70 வயதான பெண் மீது போதையில் இருந்த மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் அவரது இருக்கை அருகே சென்று சிறுநீர் கழித்துள்ளார்.
இதில் அந்த பெண் பயணியின் உடைகளும், உடைமையும் நனைந்தது. விமானம் தரையிறங்கிய பிறகும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர், ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியபோது, சிறுநீர் கழித்த நபர் தன்மீது புகார் அளிக்கவேண்டாம் என்று அழுது கேட்டுக்கொண்டதால் அந்தப் பெண்ணும் அமைதியாக இருந்துவிட்டார்.
இருவரும் சமாதானமாக சென்றதால் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
மேலும் சம்மந்தப்பட்ட அந்த பயணி 30 நாட்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த மிஸ்ராவை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
ஷங்கர் மிஸ்ரா வேலை பார்த்து வந்த அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான வெல்ஸ் பார்கோவும் அவரை பணிநீக்கம் செய்தது.
14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட சங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் மிஸ்ரா, தன் மீதான குற்றத்தை திட்டவட்டமாக மறுத்தார்.
அப்போது சங்கர் மிஸ்ரா தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், புகார் அளித்த 70 வயதான பெண், அவரே சிறுநீர் கழித்ததாக கூறினார்.
அந்த பெண் கதக் நடன கலைஞர் என்றும் , உலகில் 80% கதக் நடன கலைஞர்களுக்கு சிறுநீர் அடங்காமை பிரச்சனை உள்ளது என வாதிடபட்டது.
விமானத்தில் அந்தப் பெண்ணுக்கு அருகில் இருந்தவர்கள் ஏன் இதுதொடர்பாக புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பல சாட்சிகளும் இருந்தும் மிஸ்ராவின் வழக்கறிஞர் இப்படி அந்தர் பல்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் டெல்லி காவல்துறையினர், பெண்ணின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அப்படி ஏதும் புகார் அளிக்கவில்லை என்பதை தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கலை.ரா
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!
எங்களுக்கு மட்டும் விடியல் இல்லையா? பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்!