யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் நடந்த போராட்டத்தில் சமரசம் பேச சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் அடித்து விரட்டி, சட்டையை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்தின் மூடிகெரே தாலுகாவில் உள்ள ஹுல்மனே குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவரது மனைவி ஷோபா.
நேற்று(நவம்பர் 21) காலை இவர்கள் 2 பேரும் வனப்பகுதியையொட்டி உள்ள தங்கள் தோட்டத்துக்கு சென்று மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்து ஷோபாவை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹுல்மனே கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கியதில் ஷோபா உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலமுறை காட்டு யானை தாக்குவது குறித்து புகார் அளித்தும் அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குமாரசாமி மற்றும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க., எம்.எல்.ஏ. குமாரசாமி சென்ற போது கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
கிராம மக்களின் கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர் உரிய பதில் சொல்லாத நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி அவரின் சட்டையை கிழித்தனர்.
அப்போது காவல்துறையினர் போராடி சட்டமன்ற உறுப்பினரை மீட்டு தங்களது வாகனத்தில் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கலை.ரா
அவ்வை நடராசன் இறுதி ஊர்வலம் : உடலை சுமந்து சென்ற வைரமுத்து, ஜெகத்ரட்சகன்