டெல்லியில் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் அஞ்சலி. இவர் சுல்தான்புரியில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
புத்தாண்டையொட்டி அஞ்சலி பணிபுரியும் நிறுவனம் சார்பில் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கான பணியை முடித்துவிட்டு, அதிகாலை 1.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அப்போது கஞ்சவாலா என்ற இடத்தில் சாலையில் வேகமாக வந்த கார் அஞ்சலியின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், அஞ்சலியின் கால் காரின் அடியில் சிக்கிக்கொண்டது. ஆனால் காரில் இருந்தவர்கள் போதையில் இருந்ததால், அதை கண்டு கொள்ளாமல் காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு அஞ்சலியின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது. அவரது உடைகள் கிழிந்து நிர்வாண நிலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரில் இருந்தவர்கள் பாஜக நிர்வாகிகள் என்றும், அதனால் அவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் கூறி ஆம் ஆத்மி போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தீபக் கண்ணா (வயது 26), அமித் கண்ணா (வயது 25), கிருஷ்ணா (வயது 27), மிதுன் (வயது 26), மனோஜ் மிட்டல் (வயது 27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மிகவும் கொடூரமாக உயிரிழந்து நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சலியின் தாயார் உள்பட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், அஞ்சலியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு இன்று அறிக்கை வெளியானது. அதில் கார் இடித்த அதிர்ச்சியில் தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதில் முதுகெலும்பு, இடது தொடை, இரண்டு கீழ் மூட்டுகள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அஞ்சலியின் அந்தரங்க உறுப்பில் பாலியல் வன்கொடுமைக்கான எந்த காயமும் இல்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
“இல்லம் தோறும் வள்ளுவர்” : முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி