உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியா எந்த ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலும் இணைய தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 25) தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியை சந்தித்து ஜி20, உக்ரைன், ரஷ்யா போர் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, “கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மோதல் உலகம் முழுவதையும் பாதித்துள்ளது.
குறிப்பாக வளரும் நாடுகள் போரால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை கூட்டு முயற்சிகள் மூலம் தீர்க்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது.
உக்ரைன், ரஷ்யா மோதலின் தொடக்கத்திலிருந்தே அமைதி பேச்சுவார்த்தை குறித்து இந்தியா பேசி வருகிறது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண எந்த அமைதி பேச்சுவார்த்தையிலும் இந்தியா இணைய தயாராக உள்ளது.” என்று தெரிவித்தார்.

ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஷோல்ஸ் பேசும்போது, “ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இது மிகவும் கடினமான நேரத்தில் பொறுப்பான பணியாகும். இந்தியா அதன் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.
உக்ரைனில் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய போர் பெரும் இழப்புகளுக்கு வழிவகுத்தது. ரயில் பாதைகள், எரிசக்தி இணைப்புகள் அழிக்கப்பட்டன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு பெரிய பேரழிவு. ஏனென்றால் இந்த போர் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்