உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படவும், அமைதி நிலவவும், தேவையான சமாதான நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச மாநாடு ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றது. அதில், சுமார் நூறு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
உக்ரைன் அமைதி மாநாட்டின் இறுதி நாளான நேற்று (ஜூன் 16) முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ள உலகத் தலைவர்கள், போர் நிறுத்தம் தொடர்பாக அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், இருதரப்பிலும் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள வீரர்களைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும், ரஷ்யாவிலுள்ள உக்ரைன் குழந்தைகள் தாயகம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் சர்வதேச சமூகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியா உட்பட சௌதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் இறுதி அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெகு விரைவில் போரில் முடிவு எட்டப்படுமென நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலிருந்து சுமார் 20,000 குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாடு, உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பக்ரீத் பண்டிகை : ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!
6,890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளில் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பியூட்டி டிப்ஸ்: படரும் படர்தாமரை… தடுப்பது எப்படி?
டாப் 10 நியூஸ் : பக்ரீத் பெருநாள் முதல் எடியூரப்பா பாலியல் வழக்கு விசாரணை வரை!