இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்டார்லைனர் விண்கலனில் கடந்த ஜூன் மாதம் ஒருவாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விண்கலனின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளைச் செய்து, ஒரு வாரம் கழித்து மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரைச் சுமந்துகொண்டு, விண்வெளி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது, நாசாவும், போயிங் நிறுவனமும் ஸ்டார்லைனரில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதை கண்டுபிடித்தனர்.
போயிங் விண்கலத்தின் செயலிழப்பால் ஆய்வுகள் முடிந்தும், அவர்கள் பூமிக்குத் திரும்புவது தாமதமானது. இந்த நிலையில், இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சுனிதா வில்லியம் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளியில் ஆக்சிஜன் மற்றும் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சூழலில் உடனடியாக பயப்படும்படியாக எதுவும் இல்லை. தேவையான உணவு, ஆக்சிஜன் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற இரு ஸ்பேஸ்கிராப்ட் வழியாக 8,200 பவுண்ட் உணவு, தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் கூடுதல் நாள்களுக்கு ஏற்ப உணவு பொருள்கள் உள்ளன.
விண்வெளி வீரர்கள் அங்கு தரை, சுவர் ,சீலிங் என எதில்வேண்டுமானாலும் உறங்கி கொள்ள முடியும். ஆங்காங்கே உறங்கும் பேக்குகள் தலையணைகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு, தரையில் உள்ளவர்களுடன் வீடியோ கால், ஆடியோ கால் வழியாக பேசிக் கொள்ளவும் முடியும்.
விண்வெளி மையத்தில் ஜிம் உள்ளதால், பெஞ்ச் பிரஸ் போன்ற சிறிய உடற்பயிற்சிகளை செய்து தசைகள் மற்றும் எலும்புக்களை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும். விண்வெளி மையத்தில் காய்கறி, மலர்கள் கூட பயிரிட்டு கொள்ள முடியும். தேவையானவற்றை அவர்களே வளர்த்துக் கொள்ள முடியும் .விண்வெளி வீரர்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பாலியல் வழக்கு: 10 நாட்களில் மரண தண்டனை… மம்தா ஆவேசம்!
மாணவர்கள் போராட்டம் எதிரொலி : இழுத்து மூடப்பட்ட அரசு கல்லூரி!