மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உடனே எடுக்கப்படுமா?

Published On:

| By Kavi

இந்தியாவில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அட்டவணையின்படி 2021 க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தரவு சேகரிப்பின் பெரும்பகுதி ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2020 க்கு இடையில் செய்யப்பட்டிருக்க வேண்டும்; இறுதிச் சுற்று பிப்ரவரி 2021 இல் நடைபெற இருந்தது.

கொரோனா தொற்றுநோய் 2020 இல் தாக்கியபோது, ​​சென்சஸ் தரவு சேகரிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கோவிட் தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

கொரோனா தொற்றுநோய்க் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை நிறுத்திய சில நாடுகள் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

ஒரு சில நாடுகள் இன்னும் தொடங்கவில்லை ஆனால் இந்த நாடுகள் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவை விட மிகவும் சிறியவை.

இந்தியாவில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டாலும், சென்சஸ் தரவு சேகரிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்தத் தாமதமானது கொள்கை உருவாக்கம், பொருளாதாரம் பற்றிய அறிவு மற்றும் கொள்கை வடிவமைப்பை தெரிவிக்கும் கல்வி ஆராய்ச்சி ஆகியவற்றில் பல முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில், பொது உணவு விநியோக முறையின் கீழ் வரவிருந்த சுமார் 10 கோடி பேர் விடுபடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புவியியல் அல்லது குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் நுகர்வு, வருமானம் அல்லது செல்வத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட கொள்கைகளின் துல்லியம் இதனால் பாதிக்கப்படும்.

ஏனெனில் சென்சஸ் எடுக்கப்படாததால் அனைத்து கணக்கீடுகளும் தவறான எண்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இருக்கும்.

இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் நிலையை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Will 2021 census be taken immediately

பொருளாதார வல்லுநர்கள், சமூகவியலாளர்கள், மக்கள்தொகை ஆய்வாளர்கள் மற்றும் பொது-கொள்கை வல்லுநர்கள் கணிப்புகளைச் செய்வதற்கும், அனுமானங்களைப் பெறுவதற்கும், கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் இந்தத் தரவுகளை ஆராய்கின்றனர்.

இந்தப் பணிகள் தடைபட வாய்ப்புள்ளது. அரசாங்கக் கொள்கைகளின் முழு நடவடிக்கையும் இதனால் மோசமாகப் பாதிக்கப்படும்.

ஆனாலும், இந்த காலதாமதம் குறித்து அரசு கவலைப்படவில்லை. சென்சஸ் கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்பால் தள்ளிப்போடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இறுதியாக, வறுமை மற்றும் வேலையின்மை போன்ற முக்கியமான நடவடிக்கைகள் குறித்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் இந்தியா தாமதமாக உள்ளது என்பது இப்போது சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்குவதில் செய்யப்படும் இந்தத் தாமதம், விரும்பத்தகாத தரவு என்ன என்பதை வெளிப்படுத்தாமல்
இழுத்தடிக்கும் ஒரு பெரிய உத்தியின் ஒரு பகுதியாகவே கருதப்படவேண்டியுள்ளது.

தேசிய பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் புள்ளியியல் தரவுகளைப் பயன்படுத்துவதில் இந்தியா ஒரு காலத்தில் முன்னணியில் இருந்தது. தரவுகளின் நம்பகத்தன்மை பொதுவாக சந்தேகிக்கப்படும்
முறைசாரா துறை ( informal sector ) இந்தியாவில் பெரிய அளவில் இருந்தபோதிலும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தரவுகளை எவரும் சந்தேகிக்கப்படவில்லை.

சென்சஸ் தாமதத்தால் அந்த நற்பெயருக்கு மேலும் களங்கம் ஏற்பட்டால், அது தேசத்தின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நன்றி : தி டெலிகிராப்

தமிழாக்கம்: ரவிக்குமார்

ஜல்லிக்கட்டுக்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு!

“ஆளுநர் விளக்கம் மழுப்பல்”: கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel