காஷ்மீரில் பிடிபட்ட சிறுத்தை: விமர்சனத்துக்கு ஆளாகும் வைரல் வீடியோ!

இந்தியா

சிறுத்தை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் சிறுத்தையுடன் போரிட்ட அதிகாரிக்கு ஆதரவாகவும், சிறுத்தையை மோசமான முறையில் எதிர்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை ஒன்றினை வனவிலங்கு அதிகாரி ஒருவர் வெறுங்கையுடன் எதிர்கொள்கிறார்.

அந்த அதிகாரி மீது பாயும் சிறுத்தை அவரது கரத்தை கவ்வுகிறது. சிறுத்தையுடன் போராடும் அதிகாரியை மீட்க இதர வனத்துறையினர் கையில் தடிகளோடு பாய்கின்றனர்.

அந்த சிறுத்தையை சுமார் 10 பேர் தடிகளாலும், கட்டைகளாலும் தாக்கி, குத்தி முடக்குகின்றனர். சிறுத்தையால் கையில் கடிபட்ட காயத்துடன் வனவிலங்கு அதிகாரி உயிர் தப்புகிறார்.

27 விநாடிகளே நீடிக்கும் இந்த வீடியோ, சினிமா காட்சிகளுக்கு நிகராக சில்லிடச் செய்கிறது.

இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானது முதல் கலவையான கருத்துகளையும் பெற்று வருகிறது. நெட்டிசன்களில் கணிசமானோர், சிறுத்தையுடன் நேருக்கு நேர் எதிர்கொண்ட வனவிலங்கு அதிகாரியின் துணிச்சல் மற்றும் அவர் உயிர் தப்பிய விதத்தை பாராட்டி வருகின்றனர்.

காட்டு மிருகத்துடன் தனியாளாய் துணிந்து நின்றதையும், போராடி மீண்டதற்கும் அந்த அதிகாரிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். பலர் ஒன்று சேர்ந்து தடிகளால் சிறுத்தையை தாக்குவதையும் கூட அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

‘மனித உயிரைக் காப்பாற்றுவதுதான் இங்கே முக்கியம். அதற்காக சிறுத்தையை தாக்கியதில் தவறில்லை. சிறுத்தை தாக்கி வனவிலங்கு அதிகாரி இறந்திருப்பின், விபரீதமாகி இருக்கும். அதற்காக அந்த சிறுத்தை அதன் பின்னர் துப்பாக்கிச் சூடுக்கும் ஆளாக நேரிட்டிருக்கும்’ என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனிடையே சிறுத்தையை பொறுப்பின்றி வனவிலங்கு அதிகாரிகள் கையாண்டிருப்பதாகப் பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘வன துறையினருக்கு ஒரு சிறுத்தையை எதிர்கொள்ள இப்படித்தான் பயிற்சி கொடுத்திருக்கிறார்களா? சாமானியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வன விலங்குடன் மோதுவதை வேண்டுமானால் வீரம் என்று சொல்லலாம்.

ஆனால் வன விலங்குகளுக்கான ஓர் அதிகாரி மற்றும் அத்துறை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, சிறுத்தையை கொடூரமாக தாக்கி இருப்பது மோசமான உதாரணம்.

வனவிலங்குகளை எதிர்கொள்வது முதல் பராமரிப்பது வரை வனவிலங்கு அதிகாரிகள் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒரு கானுயிரியை இவ்வாறு தடிகள், கட்டைகள் கொண்டு கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம். அதை வனவிலங்குத் துறை அதிகாரிகளே மேற்கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது’ என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

சம்மர் டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு ஐந்து ஈஸி டிப்ஸ்!

2023-24 நிதியாண்டில் தெற்கு ரயில்வே வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ரோகித் சர்மா? அதிர்ச்சி தகவல்!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *