மக்களவைத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அந்த அட்டவணையில் 543 தொகுதிகளுக்குப் பதிலாக 544 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்று (மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணைய அட்டவணையில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருப்பதற்குப் பதிலாகத் தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்திருந்தது கவனிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், “மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் நடத்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
2 மக்களவைத் தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மணிப்பூர் புறநகர் மற்றும் மணிப்பூர் நகரம் ஆகிய இரு தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் ஏப்ரல் 19ல் 2 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26 ஒரு தொகுதிக்கும் தேர்தல் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன கலவரத்தை எதிர்கொண்டு வரும் மணிப்பூரில், பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மணிப்பூர் புறநகர் தொகுதியில் மட்டும், அதாவது ஒரே தொகுதியில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தவுள்ளது தேர்தல் ஆணையம்.
மணிப்பூர் நகரம் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மணிப்பூர் புறநகர் தொகுதியில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரண்டு தினங்களாக வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
இதில் முகாம்களுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருப்பதாகவும், மணிப்பூர் தொகுதியில் நிலவும் சிறப்பு நிலையே தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிக்கக் காரணம் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்தோருக்காக ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இரட்டை இலை சின்னம் வழக்கு முடித்துவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
டிஜிட்டல் திண்ணை: ராமதாஸுக்கு எடப்பாடி கொடுத்த லேட்டஸ்ட் ஆஃபர்!