வங்கதேசத்தில் மாணவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவர்களுக்கு இடையே மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயற்சி செய்ததால் போராட்டம் வன்முறையாக வெடித்தாக ஊடகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க ஆளும் அவாமி லீக் கட்சி முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது எனக் கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் அரசுப் பணிகள் நிரப்பப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருப்பினும், பலரும் அரசு வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதற்கு முக்கியக் காரணம், வேலை உத்தரவாதம் மற்றும் அரசு வேலையில் கிடைக்கும் சலுகைகள் போன்றவையே. இதனால் அரசு வேலையைத் தேர்ந்தெடுக்க 3,000 அரசுப் பணிகளுக்காக நான்கு லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுகின்றனர்.
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மேற்கண்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பிரதமர் ஷேக் ஹசீனா பேசியுள்ளார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என ஹசீனா தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஊக்கவிப்பதாகவும். மாணவர்களின் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கும் எதிர்க்கட்சிகள் உதவி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கடந்த 2018-ம் ஆண்டே முடிவு செய்தது. அந்த சமயத்தில் மிகப் பெரிய மாணவர்கள் போராட்டத்தை சந்திக்க நேர்ந்ததால், அரசு இந்த இட ஒதுக்கீட்டு முடிவை கிடப்பில் போட்டது.
இந்த நிலையில் அண்மையில் இந்த இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது மாணவர்களை போராட்டத்தில் குதிக்கச் செய்துள்ளது.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோதிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரியவில்லை.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் வெடித்துள்ள இந்த வன்முறை அந்த நாட்டின் நிர்வாகத் திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பில்லாமல் திண்டாடுவதை இந்தப் போராட்டம் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்றும் அரசு வேலைக்கான தேர்வுகளில் ஏற்படும் குளறுபடி மற்றும் ஊழல் ஆகியை இளைஞர்களை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது என்றும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போதிலும், வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது மாணவர்களின் மனக் குமுறலாக இருக்கிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கடையடைப்பு மேற்கொள்ளப்படும் எனவும், அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பதற்றம் குறையும் வரையில் சில முக்கிய பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாகவும் அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அறிவித்தபோதிலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால் மட்டுமே வன்முறை ஓய்ந்து வங்கதேசத்தில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கூந்தலை வளமாக்க இதைச் சாப்பிடுங்க…
ஹெல்த் டிப்ஸ்: விரதமிருக்க ஏற்றவரா நீங்கள்? யாரெல்லாம் விரதம் இருக்கக்கூடாது?
டாப் 10 நியூஸ் : அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல் ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் வரை!
சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!