பெர்சியா என்று அழைக்கப்பட்ட ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்தவர்கள் பார்சி இன மக்கள். ஒரு காலத்தில் ஈரானில் பார்சிக்களின் மதமான ஜோரோஸ்ட்ரியனிஸம் முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஆனால், நாளடைவில் அங்கு இஸ்லாம் மதம் விஸ்வரூபம் எடுத்த பிறகு, இந்த மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இவர்களின் முக்கிய தெய்வம் அக்னி பகவான்தான்.
இதனால், பார்சிக்களில் பலரும் இந்தியாவை வந்தடைந்தனர். அவர்களில் பலரும் மும்பையில் வேரூன்றத் தொடங்கினார்கள். நிலங்களை அதிக அளவில் வாங்கிப் போட்டனர். ரியல் எஸ்டேட் வணிகத்திலும் கொடிகட்டிப் பறந்தனர். அந்த வகையில், மும்பையில் மட்டும் 25 பார்சிக்கள் குடியிருப்புகள் உள்ளன. வணிகம், வங்கியாளர்கள், இன்ஜீனியர்கள், தொழிலதிபர்களாக இவர்கள் திகழ்ந்தனர்.
இந்திய வர்த்தகத் துறைக்கு வலிமை சேர்த்தவர்கள் பார்சி மக்கள் என்றால் அது மிகையல்ல. ரத்தன் டாட்டா, நுஸ்லி வாடியா ஆகியோர் அதில் முன்னோடிகள். அதே போல, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாதாபாய் நவ்ரோஜி, அணு விஞ்ஞானி ஹோமி பாபா, இந்திய ராணுவத் தலைவராக இருந்த பீல்டு மார்ஷல் சாம் மானக் ஷா என பல சாதனையாளர்கள் பார்சி மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த இனத்தவரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. 1941 ஆம் ஆண்டு ஒரு லட்சம் பார்சி இன மக்கள் இந்தியாவில் இருந்தனர். அதுவே, 2011 ஆம் ஆண்டு 60 ஆயிரமாக குறைந்தது. 2050 ஆம் ஆண்டு 40 ஆயிரமாக குறைந்து விடுமென்று கூறப்படுகிறது.
இந்தியாவில் பார்சி இன மக்கள் குறைவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான பார்சி மக்கள் திருமண பந்தத்தை துறந்து தனியாக வாழ்வதுதான் என்று சொல்கிறார்கள். மூன்றில் ஒரு பார்சி திருமணம் செய்து கொள்வதில்லை. அப்படியே, திருமண பந்தத்துக்குள் நுழைந்தாலும் கருவுறுதல் மிக குறைவாகவே நடக்கிறது. இந்தியாவில் மற்ற பெண்கள் 2.5 முறை கருவுற்றால் பார்சி இனத்தில் ஒரு முறைதான் கருவுறுதல் நடைபெறுகிறது.
அதே போல, பார்சி பெண்கள் வேறு இன ஆணை காதலித்து திருமணம் செய்தால் அவர்களை தள்ளி வைத்து விடுகிறார்கள். தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் இறந்தால் கூட அவர்களை பார்க்கவும் அனுமதிப்பதில்லை. இந்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கூட பார்சி இன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த சனயா தலால் என்ற பார்சி இன பெண், பார்சிக்கும் மற்றொரு இனத்தவருக்கும் பிறந்த ஒருவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்த மகனை பார்சி காலனியிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய கூட தடை விதித்துள்ளனர்.அந்தளவுக்கு தங்களின் பழமையான மத கோட்பாடுகளை பார்சி இன மக்கள் பின்பற்றி வருவதுதான் வியப்பை அளிக்கிறது.
தொழிலில் கவனம் அதிகமாக இருப்பதால், சொந்த வாழ்க்கையை பல பார்சி மக்கள் மறந்து விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பிக் பாஸ் – 8: சாச்சனா ராக்ஸ்,ரவீந்தர் ஷாக்!
இன்னும் பாடம் படிக்காத அரசு…ரயில் விபத்தால் கொந்தளித்த ராகுல்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை