கேரளத்தில் காதலரை கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற கரீஷ்மாவுக்கு, நீதிபதி மரண தண்டனை விதித்தார். தீர்ப்பளித்த பிறகு, பேனா முனையிலுள்ள நிப்பை உடைத்தார். நீதிபதிகள் இப்படி செய்வது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுவது உண்டு. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
சினிமாக்களில் இத்தகைய காட்சிகளை பார்த்திருப்போம். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அஜ்மல் கசாபிற்கு கடந்த மே 3, 2010 அன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது , நீதிபதி எம்.எல். தஹில்யாணி தீர்ப்பு எழுதிய பிறகு பேனாவின் நிப்பை உடைத்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறை தான் பேனா நிப்பை உடைப்பது. ஒரு நபரின் உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும் இப்படி ஒரு தீர்ப்பை அளிக்கும் அளவுக்கு தவறு செய்துள்ளீர்கள் என்கிற வேதனையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய நீதிபதிகள் இந்த நடைமுறையை தாங்களாகவே கடைபிடிக்கின்றனர்.
அந்த வகையில், நேற்று காதலன் ஷாரோனை கொலை செய்த கரீஷ்மாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஏ.எம்.பஷீர் நெய்யாற்றின்காரா நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த பின்னர், தனது பென் நிப்பை உடைத்தார். இந்த நீதிபதி மட்டுமல்ல மரண தண்டனை அளிக்கும் பல நீதிபதிகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், நமது இந்திய சட்டத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை.