சீனாவில் இறப்பு விகிதம் அதிகரித்து மக்கள்தொகை 2023ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.
இதுதொடர்பாக சீன நாட்டின் தேசிய புள்ளி விவரங்கள் துறை (NBS) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக மக்கள்தொகையில் முன்னிலையில் இருந்து வந்த சீனா, 2022ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 50,000 மக்களை இழந்தது. இதனால் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சீன மக்கள்தொகை கணிசமான அளவு குறைந்தது.
2022ஆம் ஆண்டு பிறப்பு விகிதம் 95.6 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆயிரத்துக்கு 6.39 சதவிகிதம் என்ற அடிப்படையில் அது, 90.2 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கோவிட் மரணங்கள் அதிகரித்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 6.6 சதவிகிதம் உயர்ந்து 1.11 கோடியாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இளைஞர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையும், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததும் திருமணம், குழந்தை போன்ற எதிர்கால திட்டங்களைத் தள்ளிப் போடுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் குறைகிறது” என்கிறார் சீன நாட்டின் பொருளாதார புலனாய்வு பிரிவின் முதன்மை பொருளாதார நிபுணர் யூ சூ.
மேலும், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ திட்டமே சீனாவின் தற்போதைய மக்கள்தொகை சரியும் போக்குக்கு காரணம். இந்த கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; உச்சக்கட்டமாக வேலையும் பறிக்கப்பட்டது.
வரலாற்று ரீதியாக, பெண் குழந்தையை விட ஆண் குழந்தையையே அதிகம் விரும்பும் சீன கலாசாரத்தில், இதன் எதிரொலியாக கருக்கலைப்புகள் அதிக அளவில் நடந்தன. இதனால், 1980-களில் ஆண் – பெண் விகிதம் மோசமாகத் தொடங்கியது.
இந்த நிலையில், ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கை 2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, தம்பதியர் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சமீப ஆண்டுகளில், குழந்தை பிறப்பு விகிதம் குறையும் போக்கைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றால் வரிச்சலுகைகள், பேறுகால மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கவும் சீன அரசு முன்வந்தது.
ஆனால், சீன அரசின் முயற்சி பலன் தரவில்லை. இதனால், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் அரசின் அறிவிப்புகளில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையை குறைக்கவும், குழந்தையின் பள்ளிக் கல்விக்கு உதவவும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய நாடான சீனாவில் முதுமை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்கள் தொகை வீழ்ச்சியடைவதும் தொடர்ந்தால் அது அந்நாட்டின் வளர்ச்சியை மட்டுமின்றி உலக பொருளாதாரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சேமியா பக்கோடா
மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை: எடப்பாடி, டிடிவி வலியுறுத்தல்!