வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதுதான் குஜராத் வாக்கு சதவிகிதம் குறைவுக்கு காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 1ஆம் தேதியும் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு சதவிகிதம்
இதில், முதல்கட்ட தேர்தலில் இறுதி நிலவரப்படி, அங்கு, 63.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் கடந்த 2012, 2017ஆகிய ஆண்டுகளில் பதிவான வாக்குகளை காட்டிலும் குறைவாகும்.
2012இல் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70.75 சதவிகித வாக்குகளும், 2017இல் 66.75 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. இது 2022இல் 63 சதவிகிதமாக குறைந்தது.
அதுபோல், நேற்று நிறைவுபெற்ற இரண்டாம்கட்ட தேர்தலிலும் வாக்குச் சதவிகிதம் குறைந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 58.68 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2017இல் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 2012இல் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டுகட்ட வாக்குப்பதிவிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
குஜராத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததற்கு காரணம், வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதுதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறைவுக்குக் காரணம்
அதேநேரத்தில், குஜராத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்ததற்கான காரணம் குறித்து தற்போது வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
குஜராத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டு பிரச்னைக்குத் தீா்வு காணாத மாநில அரசைக் கண்டித்து 3 கிராம மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணித்துள்ளனர்.
மேசனா மாவட்டத்தைச் சோ்ந்த வரேதா, தலிசானா, தவோல் ஆகிய 3 கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்துள்ளனர். அப்பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு மாநில அரசு தீா்வு காணவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா். அந்தக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5,200 வாக்காளா்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
குடிநீா் தட்டுப்பாடு பிரச்னை குறித்து பலமுறை அரசு அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டதாகவும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருப்பதாக அம்மூன்று கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாகவே பல்வேறு தோ்தல்களை அந்தக் கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனா். தாலுகா, மாவட்ட அளவிலான தோ்தல்கள், கிராம உள்ளாட்சித் தோ்தல்களிலும் அவா்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
ஃபிஃபா கால்பந்து: தென் கொரியாவை பந்தாடிய பிரேசில்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
ஆகா என்ன ஒரு பயங்கர சிந்தனை க்கு உட்பட்ட இன்வெஸ்டிகேஷன் செய்தி…
அப்படியே கல் வெட்டுல பொறிச்சிட்டு பக்கத்திலயே உட்கார்ந்து கொள்ளவும்..