காதலரை கொலை செய்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது கேரள பெண் கரீஷ்மா ஆவார். இளம் வயதில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியை சேர்ந்த கரீஷ்மா என்ற பெண், ஷாரோன் என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். ராணுவ அதிகாரி ஒருவருடன் கரீஷ்மாவுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ளது. இதையடுத்து, ஷாரோனை கழற்றி விட கரீஷ்மா முயன்றுள்ளார். ஷாரோன் விலக மறுக்கவே கசாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்து அவரை கொன்று விட்டார். நெய்யாற்றின்காரா நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி பஷீர் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கரீஷ்மாவுக்கு இன்று( ஜனவரி 20 ) நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.
கேரளாவில் இளம் வயதில் அதாவது 24 வயதில் தூக்குத்தண்டனை பெற்றுள்ளார் கரீஷ்மா. கடந்த 2006 ஆம் ஆண்டு 35 வயதான பினிட்டா என்பவர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றார். இவர்தான் கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற முதல் பெண் ஆவார். பின்னர், இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அடுத்து விழிஞ்சத்தில் சாந்தகுமாரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவளத்தை சேர்ந்த ரஃபீகா பீவி அவரின் இரு மகன்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பையும் நீதிபதி பஷீர்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கேரளாவில் தூக்குத்தண்டனை பெற்ற கைதிகள் 39 பேர் உள்ளனர். கரீஷ்மா இதில் 40வதாக இணைந்துள்ளார்.
கரீஷ்மாவும் ஷாரோனும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் பழக்கமாகி காதலாகியுள்ளது. பின்னர், ஜோதிடர் ஒருவர், உங்களது முதல் கணவர் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, வேட்டுவக்காடு என்ற இடத்திலுள்ள ஆலயத்தில் கரீஷ்மா ரகசியமாக ஷாரோனை மோதிரம் மாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர், ராணுவ அதிகாரியுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதும் ஷாரோனை திட்டமிட்டு கரீஷ்மா கொலை செய்துள்ளார்.
கரீஷ்மாவுக்கு இதற்கு முன்னர் குற்ற பின்னணி இல்லையென்றும், அவருக்கு இள வயது என்றும் நீதிபதியிடத்தில் வழக்கறிஞர் வாதாடியும் பலன் அளிக்கவில்லை. செய்த குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கரீஷ்மாவுக்கு நீதிபதி தூக்குத்தண்டனையை வழங்கியுள்ளார். அதோடு, கருணைக்கும் காதலுக்கும் தகுதியில்லாதவர் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்