விமானங்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தகாத முறையில் பேசுவது, நடந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் சமீப காலங்களில், சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, விமானக் கதவைத் திறந்துவிடுவது, கழிவறையில் சிகரெட் பிடிப்பது, மதுபானம் குடிப்பது, ஊழியர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் அதிகரித்து காணப்படுகிறது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு புதிய ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 568 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற கணக்கில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்துகொள்வது பதிவாகி உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் கன்ராட் கிளிப்போர்டு,
“விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்துகொள்வது அதிகரித்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது.
பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் சுதந்திர அனுபவம் கிடைக்கும் வகையில் அவர்களின் பயணம் இருக்க வேண்டும். அதற்கு ஊழியர்களின் அறிவுறுத்தல்களைக் கேட்டு, அதன்படி பயணிகள் நடந்து கொள்ள வேண்டும்.
விதிகள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக உள்ளது. விமான பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருப்பதற்கு மன்னிப்பு கிடையாது.
விடுமுறைக்கு நல்ல முறையில் நேரம் செலவிட, பொழுதுபோக்க செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்த ஒருவரும் விரும்புவதில்லை.
ஆனால், மற்ற பயணிகள், பணியாளர்களிடம் மதிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது.
அதனால், ஒரு சில சிறிய அளவிலான பயணிகள், விமான பயணத்தில் ஒவ்வொருவருக்கும் அசெளகர்யம் ஏற்படுத்துவதற்கு நாங்கள் மன்னிப்பு அளிப்பது இல்லை” என்று கூறியுள்ளார்.
உண்மையில், விமானத்துக்குள் பயணிகளால் ஏற்படும் சிறுசிறு அத்துமீறல் சம்பவங்களைப் பணிப்பெண்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவது நல்லது என்றே நிறுவனங்கள் விரும்புவதாகவே தெரிகிறது.
ஏனெனில், ஒவ்வொரு முறை இதுபோன்ற செய்தி வரும்போதும், விமான நிறுவனப் பெயரும் வெளிவருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகி வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுவதே இதற்கு முக்கிய காரணம்.
பல சம்பவங்களைப் பெரிதாக்க விரும்பாத நிறுவனங்கள் பணிப்பெண்களுடன் பேசித் தீர்த்து விடுவதாகவே பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அத்துமீறலுக்கு அரசும் விமானச் சேவை நிறுவனங்களும்தான் முடிவுகட்ட வேண்டும் என்பதே விமானப் பயணிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
ராஜ்
“தொழில் நிறுவனங்களை சந்தித்து பேசினால் முதலீடுகள் வராது” – ஆளுநர் ரவி
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஆனியன் ரிங்க்ஸ்