தன்னுடைய நான்கு வயது மகனைப் பெண் அதிகாரி ஒருவர் கொலை செய்த விவகாரம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. suchana seth allegedly kill her son
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைண்ட்புல் லேப் ஏஐ என்னும் நிறுவனத்தின் சிஈஓ சுசனா சேத் (39). கடந்த ஜனவரி 7-ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
மீண்டும் நேற்று காலை 11 மணியளவில் (ஜனவரி 8) அறையைக் காலி செய்து விட்டு டாக்ஸியில் பெங்களூருக்கு திரும்பினார். அவரின் அறையை சுத்தம் செய்யச் சென்ற ஊழியர் விரிப்புகளில் உள்ள ரத்தக்கறைகளை பார்த்து நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் போலீசாருக்கு விஷயத்தைக் கொண்டு சென்றனர். இதையடுத்து கோவா போலீசார் டிரைவரை தொடர்பு கொண்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு காரை ஓட்டும்படி கூறினர்.
அதன்படி அருகில் இருந்த சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ஜமங்கலா போலீஸ் நிலையத்துக்கு டிரைவர் காரை ஓட்டிச் சென்றார். அங்கு சுசனாவைக் கைதுசெய்த போலீசார் காரின் உள்ளே பெரிய பையில் இருந்த மகனின் சடலத்தையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலில் எடுத்து அவரை விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் சுசனா குறித்து பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
படிப்பில் மிகுந்த ஆர்வமுடைய சுசனா சேத் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக மைண்ட்புல் ஏஐ என்னும் நிறுவனத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் டேட்டா விஞ்ஞானி ஆக வேலை செய்துள்ளார்.
சுசனா சேத் ஏஐ நெறிமுறைகளில் சிறந்த 100 பெண்கள் என்ற பட்டியலில் கடந்த 2021-ம் ஆண்டு இடம் பிடித்தவர்.
கடந்த 2010-ம் ஆண்டில் இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வெங்கட் ராமனுக்கும் திருமணம் நடந்துள்ளது. 2020-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சுசனா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையில் ஒவ்வொரு ஞாயிறும் மகனைப் பார்ப்பதற்கு நீதிமன்றம் வெங்கட் ராமனுக்கு அனுமதி வழங்கி இருந்தது. இது சுசனாவிற்குப் பிடிக்கவில்லை.
இதனால் அவர் கணவர் மீதும், நீதிமன்றத்தின் மீதும் மிகுந்த அதிருப்தியில் இருந்துள்ளார். இதுதான் அவர் சொந்த மகனையே கொலை செய்யத்துணியுமளவு போனதற்குக் காரணமாக இருந்துள்ளது.
தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் வெங்கட் ராமனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் இந்தியா திரும்பியபின் கர்நாடகா மருத்துவமனையில் இருக்கும் சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
‘வாழ்க்கை அழகானது’ என கடைசியாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகன் புகைப்படத்தை சுசனா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த வழக்கு ஒத்திவைப்பு!
suchana seth allegedly kill her son