பெரியார் சிலைக்குக் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள்: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவு!

இந்தியா

பெரியார் சிலைகளுக்குக் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரிய மனுவிற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையைப் பின்பற்றியவர். இதனால் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்குக் கீழ், “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு இடம்பெற்றிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும் என்று தெய்வநாயகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெரியார் சிலைகளுக்குக் கீழ் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும்,

இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (செப்டம்பர் 12) உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பெரியார் சிலைகளுக்குக் கீழ் அமைந்திருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதைப் புண்படுத்துகிறது.

கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையைப் பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த மனுவிற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 வாரக் காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான பதிலைத் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *