இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், 2027-க்குள் மேலும் மூன்று நேரடி விற்பனை நிலையங்களை இந்தியாவில் திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் இந்த புதிய விற்பனை நிலையங்கள் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் ஐபோன் மற்றும் மேக் போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் ஐபோன் விற்பனை 2.3 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34 சதவிகிதம் அதிகமாகும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பிசினஸை தொடங்குவதற்கான செயல்முறையை அரசு எளிமையாக்கி உள்ளது. அதோடு எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான இறக்குமதி வரியையும் குறைத்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் மலிவான விலையில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் வகையில் உள்ளது.
இந்த இரண்டு காரணங்களே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு காரணமாக இருக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களின் விரிவாக்கம், ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி அவர்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்
வட்டார கல்வி அலுவலர்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
விமானப் பயணிகள் தவறாக நடந்துகொள்வது அதிகரிப்பு: காரணம் என்ன?