1940களின் இறுதியில் அப்போதைய கர்நாடகா-ஹைதராபாத் பகுதியில் உள்ள பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி சுற்றுவட்டாரத்தில் மதக்கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் தனது தாயை இழந்த 7 வயது சிறுவன் அங்கிருந்து தனது குடும்பத்துடன் சேர்ந்து அருகில் உள்ள தற்போதைய கல்புர்கி பகுதிக்கு புலம்பெயர்ந்தார்.
தாயை தட்டிப்பறித்த அந்த மதக்கலவரம், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த சிறுவனின் உள்ளத்தில் ஆழமான காயங்களை உருவாக்கியது.
அதன் பிறகு மதவாதம் குறித்த அவரது சிந்தனை முழுக்க மாறிப்போனது. எதிர்காலத்தில் இந்து சனாதனத்தை துறந்த அந்த சிறுவன் புத்த மதத்தை தழுவி அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார்.
அந்த குழந்தைதான் தற்போது காங்கிரஸ் தலைமை பதவிக்கான போட்டியில் களமிறங்கி வெற்றி பெற்ற கார்கே.
பிரிட்டிஷ் இந்தியாவின் கர்நாடகா-ஹைதராபாத் பகுதியில் இருந்த வரவட்டி கிராமத்தில் ஜூலை 21 1942-ம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கே பிறந்தார்.
படிப்பில் ஆவ்ரேஜ் ரகமாக வலம் வந்த கார்கேவுக்கு அரசியலின் மீது மட்டும் ஒரு அதீத ஆர்வம் இருந்தது. இதனால் தனது கல்லூரிப் பருவத்தின் போது கல்புர்கி அரசு கல்லூரியில் மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டார்.
பின்னர் சங்கர்லால் லஹோதி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை மேற்கொண்ட கார்கே, குடும்ப சுமையை சமாளிக்க திரையரங்கில் பணியாற்றினார்.
அதன்பின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்த சிவராஜ் பட்டீலின் ஜூனியராக இணைந்தார் கார்கே. இந்த சிவராஜ் பட்டீல் தான் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வரை உயர்ந்தவர்.
வழக்கறிஞராக இருந்த போது தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்திய கார்கே 1969-ல் அரசியலுக்கு எண்ட்ரீ கொடுத்தார்.
1972-ம் ஆண்டு தேர்தல் அரசியலில் கால் பதித்த அவர் 2019-ம் ஆண்டு வரை ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை.
12 முறை தேர்தல் களம் கண்டு 11 முறை வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து 9 முறை கர்நாடக சட்டப்பேரவைக்கும் 2 முறை மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார். இதில் 8 முறை குர்மிட்கல் எனும் தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
1976-ல் தொடக்க கல்வி அமைச்சராக கார்கே நியமிக்கப்பட்டார். அப்போது, நிரப்பப்படாமல் கிடந்த 16 ஆயிரம் பட்டியலின ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
1978-ல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் 1980-ல் வருவாய்த்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 1985-ல் காங்கிரஸின் எதிர்க்கட்சி தலைவரான அவருக்கு 1990-ல் பங்காரப்பா ஆட்சியில் மீண்டும் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த காலத்தில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது.
வீரப்ப மொய்லி ஆட்சியில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த அவருக்கு எஸ்.எம். கிருஷ்ணா ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது தான் கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட கார்கே 2009-ம் ஆண்டு தேசிய அரசியலை நோக்கி நகர்ந்தார்.
கல்புர்கி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற அவருக்கு, வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பதவியும் பின்னர் ரயில்வே அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
2014-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார.
2019-ல் நடந்த தேர்தலில் அதே கல்புர்கி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் உமேஷ் யாதவ், அதுவரை தோல்வியையே சந்தித்திராத கார்கேவை தோற்கடித்தார்.
ஆனால் அவரது அரசியல் பயணத்துக்கு ஓய்வளிக்க விரும்பாத காங்கிரஸ் தலைமை 2020-ம் ஆண்டு அவரை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்பியது
குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார் கார்கே.
இவ்வளவு நீண்ட அரசியல் பயணத்தை கொண்ட கார்கே சர்ச்சைகளுக்கும் தப்பவில்லை. 2013-ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியின் போது மகன் பிரியங்குக்கு அமைச்சர் பதவி வாங்க கார்கே செய்த முயற்சிகள் வாரிசு அரசியல் எனும் சர்ச்சையில் சிக்கியது.
இதுவரை 12 முறை தேர்தல்களில் நின்றாலும் ஒவ்வொரு முறையும் தனி தொகுதியில் நின்று மட்டுமே அவர் வெற்றி பெற்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது உண்டு.
இது மட்டும் அல்லாமல் இந்து மதத்தைவிட்டு புத்த மதத்தை பின்பற்றி வரும் அவர் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரிகளின் விமர்சன வலைகளுக்குள் விழுவதும் தொடர்கதைதான்.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கார்கே 3 முறை கர்நாடக முதலமைச்சராக முயற்சி செய்தார்.
ஆனால், அங்கிருந்த சாதிய அமைப்புகள் பட்டியலினத்தைச் சேர்ந்த அவர் முதலமைச்சராக வர முட்டுக்கட்டையாக இருந்தன. இதனால், கார்கேவுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி 1999-ம் ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா, 2004-ல் தரம் சிங், 2013-ல் சித்தராமையாவுக்கும் சென்றது.
இத்தனை முறை முதல்வர் பதவி விலகிச் சென்றாலும் ஒரு முறை கூட தலைமைக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தவில்லை. இந்த விசுவாசம் தான் தற்போது காங்கிரஸின் தலைமை பதவிக்கு அவர் களமிறங்க காந்தி குடும்பத்தின் ஆதரவை பெற்று தந்துள்ளது.
ஜூலை 21ஆம் தேதி கார்கேவின் 80-வது பிறந்த நாளை கொண்டாட கல்புர்கியில் ஏற்பாடுகள் நடந்த நிலையில், சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடக்கும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை இல்லை என அறிக்கைவிட்டார்.
அத்தோடு நிற்காமல் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தனது பிறந்த நாள் அன்றே கைதும் செய்யப்பட்டார்.
காந்தி குடும்பத்தின் ஆதரவு மட்டும் இல்லாமல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஜி 23 தலைவர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
இந்தசூழலில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தலித் தலைவர், தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 6-வது தலைவர் மற்றும் 25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பத்திற்கு வெளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் தலைவர் என பல ரெக்கார்டுகளுக்குச் சொந்தக்காரராக கார்கே மாறியுள்ளார்.
அப்துல் ராஃபிக்
சபாநாயகர் மீது குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!
“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்