கூச்சமற்ற சுய விளம்பரம்
தன்னைத் தானே மிகவும் நேசித்துக்கொள்பவர் நார்சிஸிஸ்ட் என்றழைக்கப்படுகிறார். இப்படிப்பட்டவர்கள் தனக்கும் தன்னுடைய ஆசைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். கிரேக்கப் புராணங்களின்படி, மிகுந்த அழகுடைய நார்சிஸ் என்பவன் தன்னைப் பற்றி நிரம்பப் பெருமிதம் கொள்கிறான். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இப்படியிருப்பவன், ஒருநாள் தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்து காதல்கொள்ள… கிரேக்கக் கடவுள்கள் அவனைத் தண்டித்ததாக நீளும் கதை. நார்சிஸின் இடத்தில் குர்மீத் சிங் போன்ற எவரையும் பொருத்திப் பார்க்கலாம். ‘என்னைப் பின்பற்று’ என்று சொல்பவர்களில் முக்காலே சொச்சம் பேர் இந்த ரகம்தான்.
‘நான் என்னைப் பத்தி சொன்னது போதும்; நீ என்னைப் பத்தி சொல்லு’, ‘என்னைப் பத்தி யாரும் விமர்சனம் செய்யக் கூடாது’, ‘எந்த விதியும் எனக்கு பொருந்தாது’, ‘நான் சொல்றதெல்லாம் சரி; நீ சொல்றதெல்லாம் தப்பு’ என்றிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நார்சிஸிஸ்ட் வகையறாதான். ஒருவகையில் இந்த குணம்தான், எல்லா இடங்களிலும் தன் மீது மட்டுமே கவனம் குவிய வேண்டுமென்று எதிர்பார்க்கும் ‘ஷோமேன்’களை (showman) உருவாக்குகிறது.
தேராவின் விரிவாக்கம், லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை, பிரபலங்களின் வருகை என்றான பின்பு, மனதில் தோன்றிய அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார் குர்மீத். ‘பாபாஜி’ அல்லது ‘பிதாஜி’ என்றழைக்கப்பட்ட குர்மீத், ‘ராக்ஸ்டார் பாபா’ என்றானது இதன் பின்னர்தான். 2001ஆம் ஆண்டில் இருந்து, ‘ரூபாரூ நைட்ஸ்’ என்ற பெயரில் இசைக் கச்சேரிகள் நடத்தத் தொடங்கினார் குர்மீத் சிங். இவை ‘ரிலிஜியஸ் ராக்’ (Religious Rock) என்ற புதுவகை இசையாக அறியப்பட்டன.
இந்த இசை நிகழ்ச்சிகளின்போது, இவர் அரங்கிற்குள் நுழைவதே பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கும். 30 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியவாறே வருவது, நின்றுகொண்டே கார் ஓட்டுவது என்று ஒரு கமர்ஷியல் சினிமாவில் ஹீரோவின் அறிமுகம்போல குர்மீத் சிங்கின் என்ட்ரி இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்ற குர்மீத் சிங், முதன்முறையாக ‘லவ் சார்ஜர்’ என்ற மியூசிக் ஆல்பத்தை 2014ஆம் ஆண்டு வெளியிட்டார். மூன்றே நாள்களில், இது 30 லட்சம் விற்பனையைத் தொட்டதாகச் சொல்லப்படுகிறது,
மியூசிக் ஆல்பங்களில் நடித்த பிறகு, குர்மீத்தின் கேமரா கூச்சம் அறவே காணாமல் போயிருக்க வேண்டும். அதன்பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று, எம்எஸ்ஜி – தி மெசெஞ்சர் ஆஃப் காட் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, யூடியூபில் ட்ரெய்லர் வைரலானது.
இந்தியத் தணிக்கை வாரியத்தில் இருந்த முரண்பாடுகளை வெளியே தெரியவைத்ததில், இந்தப் படத்துக்குப் பெரும் பங்குண்டு. காரணம், உள்ளங்கையினால் மின்சாரத்தை உறிஞ்சுவது, சூப்பர் ஹீரோ போல அந்தரத்தில் பறப்பது, மாய வித்தைகள் செய்வது என்று இதில் அதகளப்படுத்தியிருந்தார் குர்மீத் சிங். இதனைப் பார்த்துக் கொதித்துப்போனார் அப்போதைய சென்சார் போர்டு தலைவரான லீலா சாம்சன். படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று சில அமைப்புகள் அழுத்தம் தர, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழில் விஜயகாந்த், தெலுங்கில் பாலகிருஷ்ணா போன்றவர்கள் அதுவரை செய்ததைத்தான், குர்மீத் சிங் இந்தப் படத்தில் பின்பற்றியிருந்தார். ஒரே வித்தியாசம், முந்தையவர்களின் படங்களில் அவர்களது உண்மையான பெயரோ, வாழ்க்கையோ இடம்பெறவில்லை. அவை கற்பனைக் கதைகளாகவே முன்வைக்கப்பட்டன. ஆனால், ஆவணப்படம் அல்லது கல்விப்படம் என்ற முலாமைப் பூசிக்கொண்டு, தன்னைப் பற்றித் தானே படமெடுத்திருந்தார் குர்மீத் சிங். ஆமாம், இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை ஒளிப்பதிவு, இணை படத்தொகுப்பு, இணை கலை இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்றிருந்தார் குர்மீத். ‘இதுவும் நார்சிஸிஸத்தின் வெளிப்பாடுதான்’ என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.
உலகின் எல்லா மூலையிலும் பக்திப் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை, பெரும்பாலும் சம்பந்தப்பட்டவரைப் பற்றிய ஆவணப் படமாகவும் இருக்கின்றன. ஆனால் ஒருவரைப் போற்றி அவரே சினிமா எடுப்பதை எந்த வகையில் சேர்ப்பது? ஆனாலும், குர்மீத் நினைத்தது நடந்தது. சமூக வலைதளங்களில் எம்எஸ்ஜியைக் கிழித்துத் தோரணம் கட்டினார்கள். ‘இந்த படத்தை எல்லாம் முழுக்க பார்த்துட்டா, நீங்க ஒரு சிங்கம்தான்’ என்று மீம்ஸ்கள் பரவின. ஆனாலும், குர்மீத் மனம் தளரவில்லை. அடுத்தடுத்து, 4 திரைப்படங்களைத் தயாரித்தார்.
தனிநபர் துதியின் உச்சம்
‘டைட்டில் வேறானாலும், எல்லாப் படங்களும் ஒன்றாகத்தான் தெரிகின்றன’ என்றார்கள் சினிமா விமர்சகர்கள். எம்எஸ்ஜி – வாரியர் லயன் ஹார்ட் படத்தில் குர்மீத்தின் டைட்டில் கிரெடிட் இப்படி வெளியானது. ’உலகின் அதிசிறந்த பன்முகத் திறமை மிக்க கலைஞன், டாக்டர் புனித குர்மீத் ராம் ரஹீம் ஜி இன்சான்’ என்று. இதைப்படிக்கும்போதே, ‘க்ளுக்’ என்ற சத்தம் எழும்புகிறதா?
மேற்கண்ட படத்தில் 30 துறைகளில் பணியாற்றியிருந்தார் குர்மீத் சிங். ’பப்ளிசிட்டி டிசைனர், விஎப் எக்ஸ் கிரியேட்டிவ் ஹெட், டிஐ ஹெட், ஹேர் டிரஸ்ஸர்’ என்று நீண்டது இவருக்கான டைட்டில் கார்டு. இந்தப் படங்களில் நீதிமன்றக் காட்சிகளும் உண்டு. சிபிஐ நீதிமன்றத்தில் பலாத்கார, கொலை வழக்குகளின் விசாரணை நடத்தப்பட்ட காலகட்டத்தில், இந்தத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், குர்மீத்தின் புனித பிம்பத்துக்கு நியாயம் சேர்ப்பதற்காக இவை உருவாக்கப்பட்டன. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜாட்டு இன்ஜினீயர்’.
வழக்கமான சினிமா ரசிகர்களின் கிண்டலையே, அத்தனை படங்களும் சம்பாதித்தன. ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, அடுத்த படத்தில் பாகிஸ்தான் சென்று பம்பரமாகச் சுழல நினைத்திருந்தார் குர்மீத். அதற்குள், அவரது வாழ்க்கை திரைக்கதையில் ட்விஸ்டைத் தந்துவிட்டது நீதிமன்றத் தீர்ப்பு.
வேறு தொழிலில் சம்பாதித்த பணத்தை திரைத்துறையில் முதலீடு செய்யும் வழக்கமான தொழிலதிபரல்ல, குர்மீத் சிங். இவர் தன்னைப் பிரகடனப்படுத்த, மக்களைச் சென்றடையும் எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தத் தயாராக இருந்தார்; சமூக வலைதளங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.
இதன் பின்னணியில் இருந்தவர் குர்மீத்தின் வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சான். தேரா வளாகத்தில், குர்மீத்தின் வாரிசாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் இவர். குர்மீத் தன்னைக் காதலித்தது போலவே, ஹனிப்ரீத்தையும் வெளியிடங்களில் முன்னிறுத்தியதுதான் அவரது தோல்விகளுக்கெல்லாம் மூல காரணம் என்று சொல்பவர்களும் உண்டு.
நாளை…
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8