மினி தொடர் : யார் இந்த ராம் ரஹீம்? 8 – உதய் பாடகலிங்கம்

Published On:

| By Balaji

குர்மீத் சிங்கின் அரசியல் ஆட்டம்

கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதுதான் மூலம் இந்த தேசத்தில் மக்களின் அபிமானத்தை எளிதாகச் சம்பாதிக்கலாம். அதன் வழியே, தங்களுக்கான ஆதாயத்தைத் தேடிக்கொள்ளலாம். இதில் தனிநபர்கள், அமைப்புகள் என்று எந்த வித்தியாசமும் இல்லை. தேராவின் நலப்பணிகள்தான், இன்று அதன் பக்தர்களின் எண்ணிக்கையை ஆறு கோடியாக உயர்த்தியிருக்கிறது. குர்மீத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையை, அவரைப் பின்பற்றும் பல லட்சம் மக்களின் மனதில் உண்டாக்கியிருக்கிறது. ஒரு திசையில் ஆதரவு பெருகினால், இன்னொரு திசையில் எதிர்ப்பு துளிர்ப்பதுதானே இயற்கை?

சச்சா சவுதா போன்ற அமைப்புகளால், பஞ்சாப், ஹரியானா வட்டாரத்தில் நிலவிவந்த சமூக வடிவமைப்பு மாறியது. அது, அரசியல் செயல்பாடுகளில் பிரதிபலித்தது. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தலித் மக்களின் ஆதரவை நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாக, தேரா போன்ற அமைப்புகளின் பக்கம் திரும்பினர். இதனால், குர்மீத் சிங் போன்றவர்கள் எளிய மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நடுவே, இடைத்தரகர்களாகச் செயல்படத் தொடங்கினர்.

2001ஆம் ஆண்டுக்குப் பிறகு, தங்கள் பகுதியிலுள்ள மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கினார் குர்மீத் சிங். சிரோன்மணி அகாலி தளத்துக்கான ஆதரவை குருத்வாராக்கள் கவனித்துக்கொண்டதால், மற்ற சமூகத்தினரின் ஓட்டுகளைப் பெறும் பொருட்டு தேராவின் பக்கம் ஒதுங்கின மற்ற கட்சிகள். அப்படித்தான், தேரா சவுதாவின் ஆதரவைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.

ஒருகட்டத்தில், குடும்ப உறவும் அரசியல் பிணைப்பைத் தீர்மானித்தது. அதற்குக் காரணமானது, காங்கிரஸ் பிரமுகரான ஹர்மிந்தர் சிங் ஜேசியின் மகள் ஹுசன்மீத்துக்கும் குர்மீத்தின் மகன் ஜஸ்மீத்துக்கும் இடையேயான திருமணம்.

தேரா – குருத்வாரா மோதல்

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு, அரசியல் அதிகாரம் குவிந்ததால் தேராவுக்கும் குருத்வாராவுக்கும் இடையே மோதல்கள் பெருகின. இதன் உச்சகட்டமாக, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சர்ச்சைத் திரியைத் தூண்டிவிட்டார் குர்மீத். ஒரு விளம்பரத்துக்காக, பத்தாவது சீக்கியக் குரு கோவிந்த்சிங் போல போஸ் கொடுத்தார். ஆடை வடிவமைப்பு மட்டுமல்லாமல், அவரைப் போலவே தலைப்பாகையில் இறகை வேறு செருகியிருந்தார்.

‘இது, சீக்கிய மதத்தின் மாண்பை அவமானப்படுத்தும் செயல்’ என்று கொதித்தெழுந்தன சில அமைப்புகள். இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு போன்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. காலிஸ்தான் போராட்டக் குழுக்கள் சிலவற்றின் எதிர்ப்புகளையும் இச்செயலினால் சம்பாதித்துக்கொண்டார் குர்மீத் சிங். ஹரியானா, பஞ்சாப் மாநில நீதிமன்றங்களில் குர்மீத்துக்கு எதிராகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சிரோன்மணி அகாலிதளத்துக்கு எதிராக மக்களைத் திரட்டிய குர்மீத் சிங், காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு குரல் கொடுத்தார். இதன் விளைவாக, கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தலில் தேராவின் செல்வாக்குமிக்க பகுதியான மால்வாவைச் சேர்ந்த 21 சட்டமன்றத் தொகுதிகளை இழந்தது பிரகாஷ் சிங் பாதலின் அகாலிதளம் கட்சி. இதன்மூலம், அகாலிதளம் – பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெறும் கனவைத் தகர்த்திருந்தார் குர்மீத் சிங்.

கடந்த 2008ஆம் ஆண்டு குர்மீத் சிங்கை வெடிகுண்டுகள் கொண்டு தாக்கியது ஒரு தீவிரவாதக் குழு. இதன் தொடர்ச்சியாக, குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்தார் ஹரியானா முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடா. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை இது தொடர்ந்தது. இந்தியாவில் 36 பேருக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது என்பதிலிருந்து, குர்மீத் சிங்குக்கு அங்குள்ள கட்சிகள் அளித்துவந்த முக்கியத்துவம் எத்தகையது என்பதை உணரலாம்.

அணி மாறிய குர்மீத்

2010ஆம் ஆண்டுக்கு பிறகு, குர்மீத்தின் அரசியல் செல்வாக்கை எதிர்த்து நிற்க பாஜக விரும்பவில்லை. அதேநேரத்தில், பாலியல் வல்லுறவு வழக்கில் சிபிஐ விசாரணை வேகமெடுக்கத் தொடங்கியதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் குர்மீத்தை விமர்சிக்கத் தொடங்கினர். இதைப் பயன்படுத்த விரும்பியது பாஜக – அகாலிதளம் கூட்டணி. எனவே, குர்மீத்தின் ஆதரவைப் பெறும் வகையில், அவருக்கு எதிரான பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், 2012ஆம் ஆண்டு அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்குத் தனது மறைமுக ஆதரவைத் தெரிவித்தார் குர்மீத். அதேநேரத்தில், வழக்கம்போல காங்கிரஸ் கட்சியினரையும் சந்தித்தார்.

தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ, பஞ்சாபில் தேராவின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்று விமர்சித்தன ஊடகங்கள். இதன்பிறகு நடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காட்சிகள் மாறின. பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திரமோடி முதல் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த மோகன் பகவத் வரை பலரும் சிர்ஸா ஆசிரமத்துக்குச் சென்றனர். பகிரங்கமாகவே குர்மீத் சிங்கின் ஆதரவைப் பெற்றனர். இதுவே பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் தொடர்ந்தது. எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு, பஞ்சாபில் காங்கிரஸும் ஹரியானாவில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தது வேறு கதை.

குர்மீத் கைதான பிறகும், ஹரியானா மாநில பாஜக அரசு தேரா சச்சா சவுதாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் உடனடியாக இறங்கவில்லை. சிர்ஸா தலைமை ஆசிரமத்தில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், அங்குள்ள காப்பகங்களிலிருந்து சிறுமிகளும் இளம்பெண்களும் மீட்கப்பட்ட நிலையில், அங்கு உடனடியாகச் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகே, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.எஸ்.பவார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

சில நாள்கள் முன்பாக, ஹரியானா மாநில அமைச்சரொருவர் குர்மீத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இதுவே, அவரது அரசியல் செல்வாக்கு எத்தகையதாக இருந்தது என்பதற்கான சான்று.

இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்த பிரபலங்களில் பலர் விளையாட்டு, அரசியல் மற்றும் சினிமாத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். முதலிரண்டைக் கைக்கொண்ட குர்மீத் சிங், இந்த நூற்றாண்டின் மாபெரும் கலையான சினிமாவின் வழியாக மேலும் பல கோடி மக்களைச் சென்றடைய விரும்பினார். அது, அவருக்கு மாபெரும் நெகடிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுத் தந்தது. கூடவே, ஒரு பிரபலத்தை எந்த நொடியிலும் குப்புறத்தள்ளும் அதீத கவனத்தையும் மலையெனத் திரட்டியது.

நாளை…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 5

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share