மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5 – உதய் பாடகலிங்கம்

இந்தியா சிறப்புக் கட்டுரை

குருவின் ‘ஆசீர்வாதம்’ பெற்ற பெண்கள்

மனித உருவிலான கடவுளுக்கு ‘சத்குரு’ என்று பெயர். குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ‘தேரா சச்சா சவுதா’ பற்றிய தேடலின்போது, நமக்குக் கிடைக்கும் பதில்களில் இதுவும் ஒன்று. மஸ்தானா ஜி மற்றும் ஷா சத்னாம் சிங்குக்குப் பிறகு, சச்சா சவுதாவின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவர் குர்மீத். அதனால், அவர்கள் பெற்ற அதே மரியாதையை குர்மீத்துக்கும் தந்தனர் தேராவின் பக்தர்கள். தொன்றுதொட்டு வந்த வழக்கத்தை மீறாமல், அவரது செயல்பாடுகளை அனைவரும் போற்றினார்கள். எவரும் சிறிதளவும் விமர்சனம் செய்யவில்லை. அது சரி, சரணம் என்று பணிந்தவரின் மனம் எப்படி எதிர்க்கருத்தை வெளியிடும்? ஆதலால், 1990 செப்டம்பர் 23ஆம் தேதி முதல் குர்மீத்தின் சாம்ராஜ்யம் செயல்படத் தொடங்கியது என்று தாராளமாகச் சொல்லலாம்.

1990களில் தேரா சச்சா சவுதா தலைமையக வளாகத்தினுள்ளேயே குடி புகுந்தது குர்மீத்தின் குடும்பம். ஆசிரமத்தில் எந்த சிறப்பு நிகழ்வுகள் நடந்தாலும், அதில் மொத்தக் குடும்பமும் பங்கேற்கும். குருசார் மோடியாவில் பண்ணையார் குடும்பத்து வாரிசாக குர்மீத் அனுபவித்த வாழ்க்கை, அப்படியே இவர்களுக்கும் வாய்த்திருக்கும் என்பதைத் தனியாக விவரிக்கத் தேவையில்லை. ஆனால், குர்மீத்தின் மனைவி ஹர்ஜித் கவுர் மட்டும் பொது இடங்களில் தலைகாட்டவில்லை.

சிர்ஸா ஆசிரமத்தினுள் நுழைந்தது முதல் இந்தக்கணம்வரை, அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், குர்மீத் கைது செய்யப்படும்வரை, அவர் ஆசிரம வளாகத்தினுள் தங்கியிருந்ததாகச் சொல்கின்றன வட இந்தியப் பத்திரிகைகள். தற்போது ராஜஸ்தானிலுள்ள கங்காநாகர் மாவட்டத்துக்கு அவர் இடம்பெயர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

விரிவடைந்த தேரா

ஏற்கெனவே சொன்னதுபோல, குர்மீத்தின் வருகைக்குப் பிறகு தேரா சச்சா சவுதாவின் செயல்பாடுகள் பல மாற்றங்களைச் சந்தித்தன. அவற்றுள் ஒன்று, தேராவின் விரிவாக்கம். குர்மீத் பொறுப்பேற்று ஓராண்டு கழித்து, மிகச் சரியாகச் சொல்வதானால் 1991ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று ஷா சத்னாம் சிங் சமாதி நிலையை அடைந்தார்.

அவர் உயிருடன் இருந்தபோதே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் சச்சா சவுதா கிளை பரப்பியிருந்தது. ஆனால், அந்த வளர்ச்சியை அசுர வேகத்தில் முன்னெடுத்துச் சென்றார் குர்மீத். 1992ஆம் ஆண்டு முதல் சிர்ஸாவில் இருந்த தேரா சச்சா சவுதாவின் தலைமையகம் சுமார் 700 ஏக்கர் பரப்பில் விரிந்தது.

புதிய கட்டடங்கள் கட்டும் பணி விஸ்வரூபமெடுத்தது. பரப்பளவில் மட்டுமல்லாமல், பலவிதமான செயல்பாடுகளினாலும் ஆசிரமத்தின் எல்லை விரிவுபெற்றது. அதை ஒரு குளோபல் வில்லேஜ் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் குர்மீத்தின் ஆட்கள். அதில் பெருமளவு வெற்றியும் கண்டனர். அதன் விளைவாக, தற்போது ஹோட்டல்கள், விளையாட்டுப் பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், திரையரங்குகள் மட்டுமல்லாமல் இதர கேளிக்கைகள் நிறைந்த இடமாகவும் மாறியிருக்கிறது சிர்ஸா தலைமை ஆசிரமம்.

தற்போது மகாராஷ்டிரா, உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் இதன் கிளைகள் செயல்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரபு எமிரேட் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் கால் பதித்திருக்கிறது தேரா. உலகம் முழுவதும் இருக்கும் தேரா சச்சா சவுதா பக்தர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் இருந்தவர் குர்மீத் சிங் மட்டுமே.

பொதுவாக, தேராவின் தலைவர்களை ‘பாபா’என்று அழைப்பது வழக்கம். பக்தர்களைத் தனது குழந்தைகளாகக் கருதினார்கள் குர்மீத்தின் முன்னோடிகள். அதன் தொடர்ச்சியாக, குர்மீத்தையும் ‘பிதாஜி’ என்று அழைத்தார்கள் அங்குள்ளவர்கள். சுமார் 25 வயதே ஆனவரை, குடும்பமும் குழந்தைகளும் சூழ இருப்பவரை, பக்தர்கள் அனைவரும் ‘அப்பா’என்று அழைத்தது விநோதம்தான். குர்மீத் தலைவரான பின்பு இது ஒரு வழக்கமாக மாறிப்போனது.

சாம்ராஜ்யத்தின் பேரரசன்

ஷா சத்னாம் சிங் 11 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். அதை முறியடிக்கும்விதமாகத் தனது வேலையைத் தொடங்கினார் குர்மீத். 1994ஆம் ஆண்டில் மட்டும், இவர் சுமார் 8 லட்சம் மக்களின் பெயரை மாற்றினார். ‘புனிதப் பெயரளித்தல்’ என்று அந்த நிகழ்வு கூறப்படுகிறது. அதோடு, குரு ஷத்னாம் சிங்கின் பெயரைப் பயன்படுத்தி பல அறிவுரைகள் சொல்லத் தொடங்கினார்.

‘அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை, ஷா சத்னாம் சிங்கை நினைத்து தியானம் செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்’ என்பது அவற்றில் ஒன்று. ‘தன் தன் சத்குரு தேரா ஹை ஆஸ்ரா’ என்பது தேரா சச்சா சவுதாவின் பிரதான முழக்கம். ‘வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள, நம்முடன் கடவுளின் அம்சமான சத்குரு துணையாக இருக்கிறார்’ என்பது இதன் பொருள். இதுபோன்ற பேச்சுகளால், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் குர்மீத். அதோடு, தேரா சச்சா சவுதா சாம்ராஜ்யத்தின் பேரரசன் ஆனார்.

அரசன் என்ற தகுதிக் கொண்டவனுக்கு, அந்தப்புரம் அவசியம் அல்லவா? குர்மீத் தலைமைப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே, தேரா தலைமையகத்தினுள் பெண்களின் நடமாட்டம் அதிகமானது. ஆசிரமப் பணிகளில் அதிக அளவு பெண் சீடர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதனால் ‘சாத்வி’ என்றழைக்கப்பட்ட பெண்களின் முக்கியத்துவம் தேராவில் அதிகமானது.

ஒருகட்டத்தில், எங்கும் எப்போதும் பெண் சீடர்கள் குர்மீத்தைச் சுற்றியிருப்பது வழக்கமாயிற்று. இதன் தொடர்ச்சியாக, குர்மீத் தியானம் செய்யும் மற்றும் ஓய்வெடுக்கும் அறைக்கு வெளியே, பெண்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். குகை எனும் அர்த்தத்தில் ‘கூஃபா’ என்றழைக்கப்படும் இந்த இடத்தில், குர்மீத்தின் அனுமதியில்லாமல் யாரும் நுழைய முடியாது. அப்படியொருவர் நுழைந்தால், அவர் குருவினால் ஆசீர்வாதம் பெற்றவர் என்று அர்த்தப்படுத்திக்கொள்வார்கள் ஆசிரமவாசிகள்.

அப்படிப்பட்ட ஆசீர்வாதம், ஓர் இளம் பெண்ணுக்கும் சிறுமிக்கும் குர்மீத்தினால் கிடைத்தது. அதுவே, அவர்களது வாழ்க்கையின் மோசமான அனுபவமாகவும் மாறிப்போனது. அந்த அறைக்குள் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்கள் சொன்ன பிறகே, குர்மீத் பற்றிய சர்ச்சைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன.

நாளை…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 5

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *