மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3 – உதய் பாடகலிங்கம்

இந்தியா சிறப்புக் கட்டுரை

வெற்றிடத்தை நிரப்பும் சாமியார்கள்

குர்மீத் ராம் ரஹீமின் பின்னால், பெருமளவில் மக்கள் திரள்வது ஏன்? கடந்த 20 ஆண்டுகளில் தேரா சச்சா சவுதாவின் அரசியல் முக்கியத்துவம் அதிகமானது எப்படி? இதற்கான பதில் தெரிய வேண்டுமானால், வடமாநிலங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலுள்ள தலித் மக்களின் வாழ்க்கையை அறிய வேண்டும்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பெருமளவிலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தராஞ்சல் உள்ளிட்ட சில மாநிலங்களில் கணிசமான அளவிலும் சீக்கியர்கள் வசித்துவருகின்றனர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் 32% மற்றும் ஹரியானாவில் 19% தலித் மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பலர் கிராமங்களில் வசித்துவருகின்றனர். சொந்தமாக வீடில்லாத நிலையில், வயல்களில் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். நகரங்களில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சமுதாயத்தினாலும், அதிகாரமிக்க அரசு அமைப்புகளாலும் இவர்களது தேவைகள் பூர்த்தியாகாத நிலையில், தேரா சச்சா சவுதா போன்றவை அதைச் சரிசெய்கின்றன.

சீக்கிய சமயம் பல்லாண்டுகளாகவே, கல்சா கலாசாரத்தைச் சார்ந்து இயங்குகிறது. மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், பஞ்சாப், ஹரியானாவிலுள்ள சமூக, அரசியல் சூழலை குருத்வாராக்களே தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட குருத்வாராக்களின் முக்கியத்துவத்தை, தேராக்கள் வெகு சீக்கிரமாகத் தங்கள் பக்கம் திருப்பின. இதற்கான காரணம் மிகவும் எளிமையானது.

இதுவரை வந்த சீக்கிய குருக்கள் அனைவருமே கத்ரி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியாவில் நிலாக்கிழார்களாக இருப்பவர்களில் பெரும்பகுதியினர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு சீக்கிய சமுதாயங்களின் ஆதிக்கமே, குருத்வாராக்களில் இப்போதும் நிலவுகிறது. இவர்களால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த குருத்வாராவிலும் சம உரிமை கிடைப்பதில்லை.

தலித் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குருத்வாராக்களில் அனுமதிக்கப்பட்டாலும், எல்லோருக்குமான உணவைச் சமைக்கும் விஷயத்தில் அவர்களுக்கு இடமில்லை. எல்லா மட்டங்களிலும் திருமண உறவுகள் நிகழ்வதில்லை. உடலுழைப்பைப் போற்றுகிற, ஆயுதம் வைத்திருக்கிற உரிமையை எல்லோருக்கும் தருகிற, சமத்துவ உரிமை அனைவருக்கும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிற சீக்கிய மதத்தில்கூடத் தலித் மக்களின் நிலை இதுதான்.

வெற்றிடத்தை நிரப்பும் அமைப்புகள்

குருத்வாராக்களில் தங்களுக்கான உரிமை கிடைக்காத நிலையில், ஒவ்வோர் ஊரிலும் இவர்கள் தங்களுக்கான வழிபாட்டுத் தலங்களை உருவாக்குகினர். 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேரா சச்சா சவுதாவும், அதன் வழிவந்த குர்மீத் சிங்கின் செயல்பாடுகளும், இந்த மக்களின் மனதில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கனகச்சிதமாக நிரப்பின.

ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்த குரு சத்னாம் சிங், கத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர், ஜாட் இனத்தைச் சேர்ந்த குர்மீத் சிங்கின் அடையாளம் வெளியே தெரியாத அளவுக்குப் புதிய பெயரை சத்னாம் சிங் சூட்டியது, அதனாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. லட்சங்களில் இருந்த தேரா சச்சா சவுதா ஆதரவாளர்களின் எண்ணிக்கை, குர்மீத்தின் வருகைக்குப் பிறகு 5 கோடிக்கும் மேலானதாக மாறியிருக்கிறது. இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

சத்னாம் சிங்கிடம் ஆசி பெற்ற பிறகு, குர்மீத்தின் கிராமத்தினர் அவரை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை என்னும் மதிப்பு ஏற்கெனவே இருந்திருக்கிறது. இந்தக் கணக்கோடு, இதுவும் கூடுதலாகச் சேர்ந்துகொண்டது. விளைவு, குர்மீத் எது செய்தாலும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். எட்டு வயதிலேயே குர்மீத் டிராக்டர் ஓட்டியது சாதனையாகச் சொல்லப்படுவதையெல்லாம் இப்படித்தான் பார்க்க முடியும்.

சிறு வயதில் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் கில்லியாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் குர்மீத் சிங். கைப்பந்து, கபடி, டென்னிஸ், கால்பந்து, பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர், கூடைப்பந்து என்று ஒரு டஜன் விளையாட்டுகளில் ஆர்வம்காட்டியிருக்கிறார். கூடவே, தேரா செயல்பாடுகளோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறார். சக வயது நண்பர்களைப் போலில்லாமல் இயல்பிலிருந்து விலகிய குர்மீத்தின் குணநலன்கள், இதுபோன்று எல்லா விஷயங்களிலும் பிரதிபலித்திருக்கின்றன.

“ஆன்மிகக் கூட்டங்களுக்கு குர்மீத்தை அழைத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஒருநாள், அவரே அப்படியொரு நிலையை உருவாக்கிக்கொள்வார்” என்று குர்மீத்தின் பெற்றோரிடம் சொன்னாராம் திரிவேணிதாஸ். அவர் எந்த நோக்கத்தில் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும், குர்மீத்தின் பெற்றோரை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

குர்மீத்தின் ஜாதகத்தைப் பார்த்த அவரது பெற்றோர், 23ஆம் வயதில் அவர் சந்நியாசம் சென்றுவிடுவார் என்று தெரிந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அவருக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட முடிவு செய்தனர். இதனால், 17 வயதில் ஹர்ஜித் கவுரின் கை பிடித்திருக்கிறார் குர்மீத் சிங். 23 வயதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்திருக்கின்றனர் இந்த தம்பதியினர்.

குர்மீத்துக்கு 23 வயதானபோது, அதாவது 1990ஆம் ஆண்டு ஷா தேரா சச்சா சவுதாவின் தலைவராக இருந்துவந்த சத்னாம் சிங் ஓய்வுபெற எண்ணினார். அப்போது, தேராவில் அவருக்கு அடுத்த நிலையில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் அடுத்த வாரிசு என்றிருந்த நிலையில், திடீரென்று ஒருநாள் குர்மீத் சிங்கைத் தனது வாரிசு என்று அறிவித்தார் சத்னாம் சிங். இப்படியொரு முடிவை எடுக்குமாறு, அவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார் என்றும், இதன் பின்னணியில் குர்மீத்தின் நண்பர் குர்ஜந்த் சிங் என்பவர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடரும்…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 3

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *