மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 13 – உதய் பாடகலிங்கம்

இந்தியா சிறப்புக் கட்டுரை

மிகச் சரியான விஷயங்கள் துண்டு துண்டாக இருக்க, தவறுகள் எப்போதும் கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. இதனால், ஒரு தவறு மற்றொன்றை வெளிக்கொணர்கிறது. அது இன்னொன்றோடு இருந்த தொடர்பைக் காட்டுகிறது. பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தண்டனை பெற்ற பிறகு, தேரா தலைமையகம் பற்றி தினமொரு திகில் செய்தி வெளியாகிறது.

ஒருகாலத்தில் சிலாகிக்கப்பட்ட தேராவின் தொண்டுகளின் பின்னே சில பூதங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேரா வளாகத்தினுள் பிணங்கள் அனுமதியின்றிக் கொண்டுவரப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, ‘அந்தப் பிணங்கள் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டன’ என்று விளக்கம் தந்தது தேரா நிர்வாகம். ஆனால், தேராவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வெளியேறிய சிலர், ‘குர்மீத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இங்கு கொன்று புதைக்கப்பட்டனர்’ என்றார்கள்.

பிணங்கள் வந்தது எப்படி?

‘தேராவினுள் அமைந்துள்ள இடுகாட்டைத் தோண்டிச் சடலங்களை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்தால் இது தெரியவரும்’ என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் குர்தாஸ் நூர் என்பவர். இவர் தேராவின் நெடுநாள் பக்தர். சிர்ஸா ஆசிரமத்திலுள்ள மருத்துவமனைகளில் உடலுறுப்பு திருட்டு நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தேராவுக்குச் சொந்தமான ‘சச் கஹூன்’ (உண்மையைச் சொல்கிறேன்) இதழ் சில தகவல்களைத் தெரிவித்தது. அதில், தேரா வளாகத்தினுள் சில உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றும், சம்பந்தப்பட்ட சடலங்கள் அனைத்தும் தேரா பக்தர்களின் ஒப்புதலுடன் அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

‘வெளியிடங்களில் எரிப்பதாலோ, ஆறுகளில் வீசுவதாலோ ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டைத் தவிர்ப்பதற்காகச் சிலர் தேரா வளாகத்தினுள் பிணங்களைக் கொண்டுவந்தனர்’ என்றும் இது நீள்கிறது. தேராவைச் சோதனையிட ஹரியானா மற்றும் பஞ்சாப் நீதிமன்றம் அனுமதி வழங்கப்படுவதற்கு முந்தைய தினம் இந்த விளக்கம் வெளியானது.

இணையப் பத்திரிகை ஒன்று, குர்மீத் சிங்கின் டிரைவர் கட்டாசிங் பேசியதை, கடந்த 2007ஆம் ஆண்டு ரகசியமாகப் பதிவுசெய்தது. பின்னர் அது ஒரு செய்தி தொலைக்காட்சியிலும் வெளியானது. அதில், சம்பந்தப்பட்ட பெண் துறவியின் சகோதரரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருந்தார் கட்டா சிங். அதுபோல கடந்த சில ஆண்டுகளில் வேறு சிலரும் தேராவினுள் கொலையாகியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது.

நாசம் செய்யப்பட்ட பெண்கள்

ஆள் கடத்தல், கொலை பற்றிய தகவல்களைவிட, குர்மீத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி விதவிதமான செய்திகள் வெளிவருகின்றன. பெண் துறவிகளையும் சிறுமிகளையும் நாசம் செய்ய, ஆசிரமத்திலிருந்த சில பெண்களே உதவி செய்தார்களாம். இதற்காகவே, ’விஷ்கன்யாஸ்’ என்ற பெயரில் வயது முதிர்ந்த பெண்களை வைத்திருந்தாராம் குர்மீத்.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதலில் பாதுகாவலர்களாக, குர்மீத்தின் தனியறை வாசலில் நிற்க வைக்கப்படுவார்களாம். சில நாள்கள் கழித்து, குர்மீத்தின் பார்வைக்கு அனுப்பப்படுவார்கள். அதன்பின், தனியறையில் என்ன நிகழ்ந்தது என்பதை மற்றவரிடம் சொல்ல முடியாதபடி, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும். இதற்கு உடன்படாதவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்படுவார்களாம்.

இதில் பெருங்கொடுமை என்னவென்றால், தேரா வளாகத்திலிருந்த பக்தர்கள் வெளியேறியபோது, அவர்களோடு சேர்ந்து இந்த விஷ்கன்யாஸும் தப்பித்து விட்டார்களாம். ஆனாலும், இளம் பெண்களின் கர்ப்பத்தைக் கலைத்த, குர்மீத்துக்காக அவர்களைக் கடுமையாகத் துன்புறுத்திய, குர்மீத்துடன் பல காலமாகத் தொடர்பிலிருந்த ஒரு பெண் துறவி இப்போதும் தேராவினுள் இருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்றிருக்கும் இரண்டு பெண் துறவிகளும்கூட சமீபத்திய சோதனையின்போது விசாரிக்கப்படவில்லையாம்.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ.கே.எஸ்.பவார் தலைமையில் நடந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட கரன்சிகள், ஹார்ட் டிஸ்குகள், சிடிகள், கம்யூட்டர்கள் உள்ளிட்ட பல சங்கதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதிலிருந்த தகவல்களை அழித்ததாக, தேராவின் ஐ.டி. ஹெட் வினீத் என்பவர் கைதாகியிருக்கிறார். இன்னும் சில வாரங்களுக்கு, இந்தப் பட்டியல் நீளும்.

சாமியா, ஆசாமியா?

கைதி எண் 1997 என்ற அடையாளத்துடன், தற்போது ரோஹ்தக் சிறையில் இருக்கிறார் குர்மீத் சிங். மகன் ஜஸ்மித், ஹனிப்ரீத் இன்சான் உட்பட தனக்கு வேண்டிய 10 பேரைப் பார்க்க அனுமதிக்குமாறு இவர் கேட்டிருந்தாராம். ஆனால் இவர்களில் ஒருவர்கூட, சிறைப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. குர்மீத்தின் தாய் நசீப் கவுர் மட்டும், மிகச் சமீபத்தில் வந்து சென்றதாகத் தகவல். குர்மீத் சாமியா, ஆசாமியா என்பதற்கான பதில், இதன் மூலமாகத் தெரியவந்திருக்கிறது.

குர்மீத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் இழந்தவற்றை ஈடு செய்யாது. வாழ்க்கை மீதான நம்பிக்கையும் இளமையும் அவற்றில் முக்கியமானவை. இவர்களைப் பொறுத்தவரை, 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்துக்கான மருந்து 2017ஆம் ஆண்டில்தான் கிடைத்திருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த நீதி, இன்னும் பல அநீதிகளுக்கு முடிவு கட்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

நாளை என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. சிபிஐ நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பை எதிர்த்து, குர்மீத் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடலாம். மீண்டும் குர்மீத்தின் வாழ்க்கை புனிதமாக்கப்பட்டுக் கொண்டாடப்படலாம் அல்லது தற்போது தொடுக்கப்பட்ட கேள்விகள், பதில்களில்லாத நிரந்தரப் புதிர்களாக மாறலாம். பெருந்திரளான மக்களால் கடவுளாகவோ, மகானாகவோ கருதப்படும் நபர்களின் மறுபக்கத்தைப் புரிந்துகொள்ள இவை நமக்கு உதவலாம். இதுபோன்ற ஆசாமிகள் எவ்வாறு மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தைப் பெறுகிறார்கள் என்பதையும் குர்மீத் சிங்கின் கதை நமக்குச் சொல்லலாம்.

குர்மீத்தின் வாழ்க்கை இந்திய வரலாற்றில் விடுபட்டுப்போன குறிப்புகளை மறைமுகமாக நிரப்புகிறது. இந்த நாட்டில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் ஓராயிரம் உண்டு என்பதையும், மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பதையும், அது மீண்டுமொரு முறை நினைவுபடுத்தியிருக்கிறது.

முற்றும்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 12

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 13

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *