ஆசிரமத்துக்குள் நடந்த பிக் பாஸ்
விநோதங்கள், ஆச்சர்யங்களாவதும் அதிர்ச்சிகளாவதும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது. தேரா தலைமைக்கூடம் ஆடம்பரத்தில் மூழ்கியதும், அதன் தலைவர் பகட்டாற்றில் மூழ்கி முத்தெடுத்ததும் ஆரம்பக் கட்டத்தில் அனைவருக்கும் விநோதமாகத் தெரிந்தது. அதன் பின்னிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவர, வெளி வட்டத்தில் இருப்பவர்கள் உணர்ந்தது அதிர்ச்சியின் உச்சம்.
ஆனால், குர்மீத் சிங் கைதான பிறகும், தேரா பக்தர்களின் மனநிலையில் பெரிய மாற்றமில்லை என்கின்றன வட இந்திய ஊடகங்கள். பலவீனமானவர்களை எளிதில் சாய்க்கும், குயுக்தி நிரம்பியவர்கள் தங்கள் வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் ஒற்றை விஷயம் இதன் பின்னிருக்கிறது. அதன் பெயர் விசுவாசம்.
திட்டமிட்ட குற்றச்செயல்
பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்துக்குச் செல்லும் சாலைகளில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று லட்சக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். தேராவின் பக்தர்களைப் பொறுத்தவரை, அது அவர்களது வாழ்க்கையை மாற்றியதற்காகச் செலுத்தும் நன்றிக்கடன். இதுநாள்வரை, சமூகமும் அரசு இயந்திரமும் மேற்கொள்ளாத மாற்றங்கள் குர்மீத்தினால் மட்டுமே நிகழ்ந்தது என்று நம்புபவர்களின் விசுவாசம். ஆனால், சிர்ஸாவிலும் பஞ்ச்குலாவிலும் இன்ன பிற இடங்களிலும் வன்முறை வெடித்தது தற்செயலான விபத்தல்ல.
‘அது திட்டமிட்ட குற்றச்செயல்’ என்கிறது ஹரியானா காவல்துறை. பஞ்ச்குலாவைச் சுற்றியிருந்த பகுதிகள் வன்முறைக்களமாக மாறுவதற்காக, சுமார் 5 கோடி வரை தேரா நிர்வாகம் சார்பில் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆதித்யா இன்சான், ஹனிப்ரீத் இன்சான் மற்றும் சுரேந்திர திமான் இன்சான் ஆகியோர் இதன் பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பஞ்ச்குலா தேரா நிர்வாகி சம்கவுர் சிங் என்பவருக்கு இதில் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது காவல்துறை. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இந்த வன்முறையால் 41 பேர் மரணமடைந்தனர்; சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்திருக்கின்றனர். இரு மாநிலங்களை முற்றிலுமாக முடக்கிய வன்முறையினால், உலகம் முழுவதும் தெரிந்தமுகமாகிவிட்டார் குர்மீத் சிங்.
முரட்டுத் துணிச்சல்
திரை மறைவில் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தும் வித்தைகளுக்கு மத்தியில், அலட்சிய மனோபாவத்துடன் எதையும் கடக்கும் முரட்டுத் துணிச்சல் குர்மீத்திடம் அதிகம். இந்த விநோத நாயகனுக்கு, வாழ்வின் ஒவ்வொரு கணமும் கமர்ஷியல் சினிமாவில் இடம்பெற்றிருக்கும் ஹீரோயிஸக் காட்சிகள்தான். ஹனிப்ரீத்துடன் தகாத உறவு கொண்டிருக்கிறார் என்று குர்மீத் மீது விஸ்வாஸ் குற்றம் சுமத்திய பிறகே, இருவருக்குமான நெருக்கம் மேலும் அதிகமானது. இது ஒரு சோறு பதம். இதுவே, குரு பிரம்மச்சாரி என்றழைக்கப்பட்ட ஹனிப்ரீத்தான் அடுத்த வாரிசு என்று சொல்லும் அளவுக்குப் போனது.
கடந்த 2007ஆம் ஆண்டு தன் மகன் ஜஸ்மீத்தை வாரிசாக அறிவித்தார் குர்மீத். ஆனால், அதைச் செயல்படுத்த முடியாதபடி ‘வாரிசுகள் தேராவில் தலைமையேற்க முடியாது’ என்ற விதி குறுக்கே இருந்தது. சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும்வரை, ஹனிப்ரீத்துக்கான கதவு திறந்தே இருந்தது. கிட்டத்தட்ட, தனது மனசாட்சியைப் போன்றே ஹனிப்ரீத்தைக் கருதியிருக்கிறார் குர்மீத். தற்போது தேராவைத் தற்காலிகமாக நிர்வகித்துவரும் விபாசனா என்ற பெண் சிஷ்யையும் இந்தப் போட்டியில் இடம்பிடித்திருக்கிறார்.
கடந்த 25 ஆண்டு காலமாக, சர்ச்சைகளின் வழியாகவே தனது புகழைப் பெருக்கியவர் குர்மீத். தற்போது, இதே உத்தி குர்மீத்தை எதிர்ப்பவர்களுக்கு உதவுகிறது. கோடிக்கணக்கில் சொத்துகள், லட்சக்கணக்கில் பக்தர்கள் என்று தன் துறவு (?!) வாழ்க்கையைத் தொடங்கியவர் குர்மீத். எளியவனுக்கு எளியவன் என்று சொல்லிவிட்டு, மறுகணமே நான் எல்லோரையும்விடப் பெரியவன் என்பதை வெளிக்காட்டுவது இவரது வழக்கம்.
குர்மீத் எங்கு சென்றாலும், ராஜ உலா போல அவரது காரின் முன்னும் பின்னுமாகப் பல கார்கள் அணிவகுக்கும். இதில் பெண் சீடர்களும் தனிப் பாதுகாவலர்களும் நிரம்பியிருப்பார்கள். இந்த சொகுசுக் கார்களில் பல போலியானவை என்றும், இதனை வடிவமைக்கப் பெரும்பரப்பில் ஒரு பட்டறை செயல்பட்டுவந்ததாகவும் தற்போது தெரியவந்திருக்கிறது.
2009ஆம் ஆண்டு தேரா ஆசிரமத்தில் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியை குர்மீத் நடத்தினார் என்பது இன்னொரு விநோதமான தகவல். இதை உறுதிப்படுத்தியிருக்கிறார் தேராவில் பணிபுரிந்த குர்தாஸ். இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட்டும் அவரே; பிக் பாஸும் அவரே. ஹனிப்ரீத்தும் அவரது கணவர் விஸ்வாஸும்கூட இதில் கலந்துகொண்டார்களாம். ஆனால் ஹனிப்ரீத்தைப் பிரிந்திருக்க முடியாமல், பிக் பாஸின் பாதியில் குர்மீத் அவரை அழைத்துக்கொண்டதாகத் தகவல். இந்த நிகழ்ச்சிக்காக, சம்பந்தப்பட்டவர்களின் பாத்ரூமில்கூட சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டதாம்.
ஆண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை
தான் என்ன செய்தாலும், மற்றவர்களால் அதற்கு எதிர்வினை வராது என்று தீர்க்கமாக நம்பினார் குர்மீத். தொடர்ந்து தன்னிடம் மன்னிப்பு பெறும் ஆசிரமப் பெண்களுக்கு மட்டுமே, அவர் தீட்சையளித்தார். கால மாற்றத்தில், இவரிடம் அடிமை போல செயல்படும் ஆண்களுக்கு, இந்தப் பெண் சீடர்கள் மனைவிகளானார்கள். அதுவரை, இந்தப் பெண்கள் தங்கும் விடுதியை, விதை நீக்கம் செய்யப்பட்ட ஆண்களே காவல் புரிந்துவந்தார்கள். இதுபற்றி, 2014ஆம் ஆண்டு ஹரியானா நீதிமன்றத்தில் ஹன்ஸ்ராஜ் என்பவர் வழக்கு தொடுத்தார்.
பதிமூன்று வயதில் தேராவில் சேர்ந்த இவருக்கு, 19 வயதில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. ‘இதைச் செய்தால்தான் கடவுளுக்கு நெருக்கமாகலாம்’ என்று குர்மீத் சொன்னதை, இவரைப் போன்று சுமார் 400 பேர் நம்பியிருக்கிறார்கள். தன்னைத் தவிர வேறு யாருக்கும், பெண் சீடர்களுடன் தொடர்பிருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இதைச் செய்தாராம் குர்மீத்.
ஆதரவற்ற ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் பள்ளிகளை, தேரா வளாகத்தினுள் நடத்திவந்தார் இவர். இதிலிருந்த குழந்தைகள் அனைவரும், குர்மீத்தின் மகன்கள் என்றும் மகள்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். குர்மீத் கைதான பிறகு, இங்குள்ள சிறார்களும் சிறுமிகளும் பாதுகாப்பாக வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். சிர்ஸா ஆசிரமத்திலிருந்து வெளியேறிய சாத்விக்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
2002ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியபோது, ஆசிரமத்தினுள் 40 முதல் 50 சாத்விக்கள்வரை பணியாற்றியதாகச் சொல்லியிருந்தார். அப்போது இதுதொடர்பாக நடந்த உள்ளூர் பஞ்சாயத்தில், ‘தான் உடலுறவு கொள்ளும் திறனற்றவர்’ என்றாராம் குர்மீத். அதன் பிறகு, அந்த விசாரணை கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதக் கணக்குப்படி, சிர்சா ஆசிரமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண் சீடர்கள் இருந்திருக்கின்றனர்.
“இந்த 300 பெண் சந்நியாசிகளில் 90 சதவிகிதம் பேர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர்கள்தான்” என்றிருக்கிறார் குர்மீத்தின் முன்னாள் மெய்க்காப்பாளரான பீந்த் சிங். “அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்ததனால்தான், சிபிஐ நீதிமன்றத்தின் மூலமாகத் தண்டனை கிடைக்க 15 ஆண்டுகள் ஆனது” என்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞரான உத்சவ் சிங் பைன்ஸ். “இதுபோல பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்காக, நீதிமன்றம் தானாக வழக்கு தொடர வேண்டும்” என்றிருக்கிறார்.
தேரா தலைமை ஆசிரமத்திலிருந்த காப்பகம் மட்டுமல்லாமல், அங்குள்ள மருத்துவமனைகளிலும்கூட முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்கின்றன வட இந்திய ஊடகங்கள். உடலுறுப்புகள் திருட்டு நடந்திருக்கக்கூடும் என்று வெளியான செய்திகளுக்கு, மிகவும் காட்டமாகப் பதிலளித்திருக்கிறார் தேராவைச் சேர்ந்த விபாசனா. இந்த நிலையில்தான், குர்மீத்துக்கு வேண்டாதவர்கள் தேராவினுள் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார் அங்கு பணிபுரிந்த கட்டா சிங்.
நாளை…
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11