மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10 – உதய் பாடகலிங்கம்

இந்தியா சிறப்புக் கட்டுரை

வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்று நினைப்பவர்களில் பலர், தங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த வாசகங்களை எல்லாம் கல்வெட்டில் பொறித்து காவல் காப்பார்கள் இவர்களது அடிவருடிகள். மனிதர்களின் மனதை வாசிக்கும் திறன் கொண்டவரான குர்மீத், இதையும் நன்கு உணர்ந்திருக்கிறார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால்தான், அவரால் தனது வார்த்தைகளுக்கு எதிரான வாழ்வை மிகத் திறமையாக மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

தேராவின் பக்தர்கள் சாதியற்ற அடையாளத்தோடு இருக்க வேண்டுமென்பதற்காக, ஒவ்வொருவருடைய பெயருக்குப் பின்னும் ’இன்சான்’ என்ற வார்த்தையை இணைத்தார் குர்மீத் சிங். சரண்ப்ரீத் இன்சான், அமர்ப்ரீத் இன்சான், ஜஸ்மீத் இன்சான் என்று தன் பிள்ளைகளது பெயரையும் மாற்றினார். மகள் சரண்ப்ரீத்தின் குழந்தைகளுக்கு ஸ்வீட்லக் சிங், சுபஹ் – இ – தில் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார். பெயர் மாற்றத்தை, மக்களைச் சென்றடையும் ஆயுதமாகப் பயன்படுத்தினார் குர்மீத்.

2007ஆம் ஆண்டு குர்மீத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டார் அவரது மகன் ஜஸ்மித். தேரா சச்சா சவுதாவில் ரத்த உறவுகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனாலும், குர்மீத் அந்த விதியைத் தளர்த்தினார். இந்த நிலையில்தான், ஜஸ்மித்துக்குப் போட்டியாக வந்து சேர்ந்தார் ஹனிப்ரீத் இன்சான். குர்மீத்தின் வளர்ப்பு மகளான இவரது உண்மையான பெயர் பிரியங்கா தனேஜா. இவர் எப்படி தேராவினுள் நுழைந்தார் என்பது இன்னொரு பெருங்கதை.

குர்மீத்தின் லீலையால் பிரிந்த குடும்பம்

ஹரியானாவிலுள்ள ஃபதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. 1999ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி இவருக்கும் தேராவின் பரம விசுவாசியான விஸ்வாஸ் குப்தாவுக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, புதுமணத் தம்பதிக்குத் தனது கூஃபாவில் விருந்து வைத்தார் குர்மீத் சிங். அன்றே, பிரியங்காவின் பெயரை ஹனிப்ரீத் என்று மாற்றியவர், அவரைத் தனது மகளாகவும் அறிவித்தார். ஹனிப்ரீத்தைத் தனது மூன்றாவது மகள் என்றும், விஸ்வாஸைத் தனது மகன் என்றும் கொண்டாடினார். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அப்போது குர்மீத்தின் வயது 33 மட்டுமே.

திருமணத்துக்குப் பிறகு, சிர்ஸாவிலுள்ள தேரா ஆசிரம வளாகத்திலேயே விஸ்வாஸின் பெற்றோருடன் தங்கினர் புதுமணத் தம்பதியர். அதன் பிறகு, தேராவின் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார் ஹனிப்ரீத். இதற்கான பலன், பத்து ஆண்டுகள் கழித்து தெரிந்தது. குர்மீத்தின் வளர்ப்பு மகள் என்ற அந்தஸ்து, தேராவின் பக்தர்களிடையே ஹனிப்ரீத்துக்கு நல்ல அறிமுகத்தைத் தந்திருந்தது.

அந்த காலகட்டத்தில் விஸ்வாஸும் ஹனிப்ரீத்தும் வெளியே எங்கு சென்றாலும், அவர்களுடன் குர்மீத்தும் கண்டிப்பாக இருப்பார் அல்லது குர்மீத் எங்கு சென்றாலும் இவர்களும் உடனிருப்பார்கள் என்ற நிலை இருந்தது. 2011ஆம் ஆண்டு, திடீரென ஒருநாள் விஸ்வாஸ் குடும்பத்தினர் மீது சிர்ஸா காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார் ஹனிப்ரீத்.

திருமணம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் கழித்து, இந்தத் தம்பதிகளுக்குள் விரிசல் விழுந்தது. இதைத் தொடர்ந்து, சிர்ஸாவிலிருந்து வெளியேறி பஞ்ச்குலாவில் தனது பெற்றோருடன் குடியேறினார் விஸ்வாஸ். இவரது பெற்றோர் தேராவின் 40 ஆண்டுகால பக்தர்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. சில நாள்கள் கழித்து, தனது மனைவியை குர்மீத் அபகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விஸ்வாஸ். அப்போது, “அவள் மீதான கெட்ட எண்ணத்தில்தான், குர்மீத் அவளைத் தத்தெடுத்தார். அவள் அழகுக்காக அவளை நாசப்படுத்திவிட்டார்” என்றார்.

2011 ஜூன் மாதம் குர்மீத்தின் கூபாவில் இருவரும் தகாத உறவு கொண்டிருந்ததைப் பார்த்ததாக விஸ்வாஸ் சொல்கிறார் அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.ஜோஷி. “இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார் பாபாஜி. அதன் பின்னும் அவரது ஆட்கள் நான் எங்குசென்றாலும் பின்தொடர்ந்தார்கள்” என்றார் விஸ்வாஸ்.

ஆனால், விஸ்வாஸ் இந்த வழக்கிலிருந்து திடீரென்று பின்வாங்கினார். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டதாகச் சொல்லப்படுகிறது.

தந்தை’யின் வழியில்…

விஸ்வாஸை விட்டு விலகிய பிறகு, குர்மீத்தின் நிழலாகவே இருந்தார் ஹனிப்ரீத். கடந்த ஏழு ஆண்டுகளாக, தேராவில் மேற்கொள்ளப்பட்ட பல முடிவுகளில் இவருக்கும் பெரும் பங்குண்டு. குர்மீத் தனது மகள்களை ‘பாபா’ஸ் ஏஞ்சல்ஸ்’ என்று பன்மையில் குறிப்பிட, தன்னைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளில் ‘பாபா’ஸ் ஏஞ்சல்’ என்றே ஒருமையில் சொல்லிவந்திருக்கிறார் ஹனிப்ரீத்.

இவரை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் முறையே 5 லட்சம் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். நண்பர்கள் தினம் அன்று, ‘என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் குர்மீத்ஜி’ என்று ட்விட்டியிருக்கிறார் ஹனிப்ரீத். “ராக்ஸ்டார் பாபாவின் நோக்கங்களை செயலாக மாற்றுவதில் ஆர்வம்கொண்டவள்” என்பது இவரது ட்விட்டர் நிலைத்தகவல்களில் ஒன்று.

கடந்த ஏழு ஆண்டுகளில், இவர் சினிமா நடிப்பு மற்றும் இயக்கம் பற்றி கற்றுக்கொண்டார். ‘எம்எஸ்ஜி – தி மெசெஞ்சர்’ படத்தில் கிரியேட்டிவ் டைரக்டர். அடுத்த படத்தில் நடிகை, அதற்கடுத்த படத்தில் டைரக்டர் என்றானவர், கடைசி இரு படங்களில் இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் குர்மீத்தைப் போலவே தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். ’ஹிந்த் கா நபாக் கோ ஜவாப்’ படத்தில் 21 வேடங்களில் நடித்து சாதனை வேறு புரிந்திருக்கிறார் ஹனிப்ரீத்.

”அப்பா, நான் என்ன செய்ய.. உங்களைப் பார்த்தா அன்பு மேலும் அதிகமாகுது” என்றவாறே, ஓர் இளம் பெண் குர்மீத்தின் மீது காதல் பார்வை வீசுவார். தன்னைப் பற்றிய சினிமாக்களைத் தயாரித்த குர்மீத், அதில் இப்படியொரு காட்சியையும் இடம்பெறச்செய்தது தற்செயல்தானா? தெரியவில்லை.

இதற்கான பதிலைச் சொல்ல வேண்டிய குர்மீத் சிறையில் இருக்க, ஹனிப்ரீத் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. குர்மீத்தின் குடும்பத்தினர் குருசார் மோடியா கிராமத்தில் இருக்க, சிர்ஸா ஆசிரம நிர்வாகத்தை நடத்தி வருகிறார் விபாசனா என்ற சிஷ்யை. குர்மீத்துக்குப் பிறகு ஹனிப்ரீத் தேராவின் தலைவராவார் என்ற நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று குர்மீத் கைதானபோது அவருடன் இருந்தவர் ஹனிப்ரீத் மட்டுமே. சிர்ஸா டூ பஞ்ச்குலா, பஞ்சுகுலா டூ ரோஹ்தக் சிறை வரை சென்றவர், அங்குள்ள தனியறையில் சுமார் இரண்டு மணிநேரம் குர்மீத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டாராம். வழக்கமாக, சிறை வளாகத்தினுள் ஓர் ஆண் குற்றவாளியுடன் பெண் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதனை மீறியிருக்கிறார்கள் ஹனிப்ரீத்தும் குர்மீத்தும். அதன் பிறகு, ஹனிப்ரீத் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. குர்மீத்தின் ஆசிரம வினோதங்களில் ஒன்றாக ஹனிப்ரீத்தும் மாறிவிட்டாரா என்பதற்கான பதில், அவர் வெளியில் தலைகாட்டினால் மட்டுமே தெரியவரும்.

நாளை…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 5

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *