பிறக்கும் குழந்தையின் பாலினத்தை ஆணின் குரோமோசோம்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதை சமூகம் எப்போது புரிந்துகொள்ளும் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரதட்சணை கொடுமை மற்றும் தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதற்காக கணவர் மற்றும் மாமியார் துன்புறுத்தியதை தொடர்ந்து டெல்லியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விசாரணைக்கு நடுவே நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா கூறியுள்ள கருத்துகள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மனசாட்சியுள்ள சமூகம் ஏற்றுக்கொள்ளாது!
அவர், ”இந்த வழக்கு சமூகத்தில் வரதட்சணை கொடுமையும், பெண் குழந்தைகள் மீதான வெறுப்பும் பரவலாக காணப்படுகிறது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு பெண் கொண்டுவரும் வரதட்சணையை வைத்து அவரின் மதிப்பை தீர்மானிப்பது, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது.
மகளின் வாழ்க்கையை நினைத்து கணவர் வீட்டில் நடக்கும் அத்தனை துன்புறுத்தல்களையும் தாங்கி கொள்ளும்படி அவரிடம் பெற்றோர் அறிவுறுத்துவது பிற்போக்குதனமானது. இது கவலையளிக்கிறது.
தொடர்ச்சியான வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டால், அவர் பெற்றெடுத்த குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இந்த வழக்கிலும் உயிரிழந்த பெண்ணின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாங்க முடியாத அதிர்ச்சி இருக்கும்.
பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்காக ஒரு பெண் தனது உயிரை இழந்துள்ளார். மனசாட்சியுள்ள சமூகத்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆண் குரோமோசோம்கள் தான் தீர்மானிக்கின்றன!
பிறக்கும் குழந்தையின் பாலினத்திற்கு மனைவி மட்டுமே பொறுப்பு என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம். இதற்கு பின்னால் உள்ள மரபணு அறிவியல் காலம் காலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தை பெற்றதற்காக மருமகள்களை குறைகூறி துன்புறுத்தும் கணவரின் பெற்றோர், முதலில் தங்கள் மகனின் குரோமோசோம்கள் தான் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையாக பெண்ணின் உடலில் XX குரோமோசோம்களும், ஆண் உடலில் XY குரோமோசோம்களும் உள்ளன. பெண்ணிடம் உள்ள குரோமோசோம்களால் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆணிடம் உள்ள XY குரோமோசோம்களால் மட்டுமே ஆண் குழந்தையை உருவாக்க முடியும்.
அதன்படி பிறக்கும் குழந்தையின் பாலினத்தை ஆணின் குரோமோசோம்கள் தான் தீர்மானிக்கின்றன. இந்த அடிப்படை கல்வியறிவை, ஆண் வாரிசு இல்லை எனக்கூறி பெண்களை சித்ரவதை செய்யும் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
ஏனெனில் இது போன்ற கொடுமைகள் இன்று நேற்று நடைபெறுவதல்ல. கணவர் மற்றும் மாமியார்களின் ‘ஆண் வாரிசு’ விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட எத்தனையோ பெண்ணின் தற்கொலை வழக்குகளை இந்த நீதிமன்றம் பல ஆண்டுகளாக கையாண்டுள்ளது. இந்த கொடுமைகளை களைய நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தைவரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமானதாக கருதப்படும்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா