இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனினும், பல சமஸ்தானங்கள் இன்னும் உள்ளன.
ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இப்போதும் மன்னரின் வாரிசுகள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் இப்போது உண்மையிலேயே ஒரு மன்னர் ஆட்சியில் இருக்கிறார். அவரின் பெயர் ராமன் ராஜாமன்னன். கேரளாவில் மன்னன் என்ற ஆதிவாசி மக்களுக்கு இவர்தான் மன்னர்.
இடுக்கி மாவட்டத்தில் கோழிமலை என்ற மலைப்பகுதியில் இந்த மன்னர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 48 ஆதிவாசி கிராமங்களுக்கு இவர்தான் மன்னர்.
தென்னிந்தியாவில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே மன்னர் இவர்தான். கடந்த 2012-ஆம் ஆண்டு ஆர்ய ராஜ மன்னன் என்பவர் மறைந்த பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். மன்னர் சமுதாயத்தில் கல்லூரி சென்று பட்டம் பெற்ற ஒரே நபர் இவர்தான். எர்ணாகுளம் மகாராஜ கல்லூரியில் ராஜா மன்னன் பி.ஏ. பொருளதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
மன்னர் ராஜா மன்னனுக்கு நாளை (ஜனவரி 26) டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. கேரள பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓ.ஆர்.கேலு நேரில் சென்று அழைப்பிதழை மன்னரிடம் வழங்கினார். இதையடுத்து, ராஜா மன்னரும் அவரின் மனைவி பினாமோளும் குடியரசு தின விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர்.
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் பழங்குடியின மன்னர் இவர்தான். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் ராஜா மன்னனை சந்திக்கிறார். பிறகு, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இடுக்கி திரும்புகிறார்.