இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது. யார் இந்த முகுந்த் வரதராஜன் என்று பார்க்கலாம்.
கோழிக்கோட்டில் தமிழ் பெற்றோருக்கு பிறந்த முகுந்த் வரதராஜன் சென்னையில்தான் படித்தார். இந்திய ராணுவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 2006ம் ஆண்டு, ராணுவத்தின் 22வது இராஜ்புத் பிரிவில் லெப்டினன்டாக சேர்ந்தார். தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலி இந்து ரெபேக்கா வர்கீஸை முகுந்த் திருமணம் செய்தார். இல்லற வாழ்வின் அடையாளமாக அஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2012 ஆம் ஆண்டு மேஜராக பதவி உயர்வு பெற்று, 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையில் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பணியாற்றினார். ஷோபியான் மாவட்டம் தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்த காலக்கட்டம் அது.
2014 ஆம் ஆண்டு ஷோபியான் மாவட்டத்தின் மக்கள் குடியிருப்பில் தீவிரவாதிகளின் தலைவன் அல்தாப் வாணி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் வந்த போது, உணவருந்தி கொண்டிருந்த மேஜர் முகுந்த் தன்னிடம் உள்ள படைகளோடு விரைந்தார். குடியிருப்பு பகுதி என்பதால் பெரிய ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் சிறிய படையோடுதான் சென்றார்.
தனது படையை வெளியே நிற்க சொல்லி விட்டு தன் நண்பர் சிப்பாய் விக்ரம் சிங்குடன் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் மூன்று பயங்கரவாதிகள் இருந்தனர். அவர்கள் சராமரியாக சுட்டனர். அப்போது, கையெறி குண்டு வீசி ஒரு தீவிரவாதியை கொன்றார். புகை மூட்டத்துக்கு நடுவே மற்றொரு தீவிரவாதியும் அல்தாப் வாணியும் தப்பி ஓட முயற்சிப்பதை முகுந்த் கண்டார்.
இதே சமயத்தில் நண்பர் விக்ரம் சிங் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டார். இதை கண்ட அடுத்த நொடியே அல்தாப் வாணியையும் மற்றொரு தீவிரவாதியையும் முகுந்த் சுட்டு பொசுக்கினார். தீவிவாதிகளுடன் நடந்த சண்டையில் முகுந்தின் உடலில் 3 குண்டுகள் பாய்ந்திருந்தன. உடலில் இருந்த குண்டுகளுடன்தான் அவர் தீவிரவாதிகளை வேட்டையாடினார்.
பின்னர், வெளியே வந்த அவர் மயங்கி விழ, மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியில் வீர மரணம் அடைந்தார். 2015 ஆம் ஆண்டு முகுந்த் வரதராஜனுக்கு மிக உயரிய விருதான “அசோகா சக்ரா ” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பெற்று கொண்டார். தனக்கு என்ன நேர்ந்தாலும் தைரியத்தோடு இருக்க வேண்டும் என்று முகுந்த் தன் மனைவியிடத்தில் கூறியிருக்கிறார். இதனால் , கணவரின் இறுதி சடங்கில் கூட இந்துவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்