ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விதியை யாராலும் மாற்ற முடியாது என்று சாமியார் போலே பாபா கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஆன்மீக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது பலரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் பலரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் உத்தரபிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் போலே பாபா சாமியார் பெயர் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக போலே பாபா IANS ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஜூலை 2-ல் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்கிறோம். ஆனால், விதியை யாராலும் மாற்ற முடியாது.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணித்து தான் போகப்போகிறார்கள். அவர்களின் நேரம் வேண்டுமானால் மாறுபடலாம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கூட்டத்தில் விஷம் தெளிக்கப்பட்டதாக எங்களிடம் கூறினார்கள்.
எனது நற்பெயரை கெடுக்க சதி நடந்துள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரபிரதேச அரசு அமைத்துள்ள எஸ்.ஐ.டி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். உண்மை நிச்சயமாக வெல்லும், சதிகாரர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மகம் முதல் கேட்டை வரை!
மாரி செல்வராஜின் “வாழை”… “தென்கிழக்கு தேன்சிட்டு” முதல் சிங்கிள் எப்படி?